ராணுவ தாக்குதலுக்கு பீஜிங்; சைபர் அட்டாக்குக்கு செங்குடு! உஷாராக இருந்து கொள்ளுங்கள் மக்களே...
சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் மீது லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் அடாவடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சுமார் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து , சீனாவிலிருந்து இந்திய வங்கிகள் நிதி உள்ளிட்ட சேவைகளை வழங்கும் இணைய தளங்கள் மீது அதிதீவிரமான சைபர் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்திய இணைய தளங்கள், வங்கி மற்றும் நிதி செலுத்தும் பேமென்ட் தளங்கள் மீது டி.டி. ஓ.எஸ் ( distributed denial of service ) தாக்குதலைத் தொடுத்திருக்கிறது, சீனா. டிடிஓஎஸ் தாக்குதல் என்பது சேவை மறுப்புத் தாக்குதல் என்று சொல்லப்படுகிறது. இணையதளம் மற்றும் வலையமைப்புகள் தரும் சேவைகளை அதன் பயன்பாட்டாளர்கள் அணுக முடியாத வண்ணம் முடக்கும் செயலே டி.டி.ஓ. எஸ் தாக்குதல் எனப்படுகிறது.
அதாவது நாம் இப்போது வாங்கிச் சேவையை இணைய தளம் வாயிலாகப் பயன்படுத்தி வருகிறோம். வங்கி, நிதி உள்ளிட்ட சேவைகளை வழங்கும் இணையதளத்துக்கும் அதன் பயன்பாட்டாளர்களான நமக்கும் இடையில் புகுந்து தடுத்து நிறுத்துவதே இந்தத் தாக்குதல். செயற்கையான முறையில் அதீத இணையதள போக்குவரத்தை உருவாக்கி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தாத வகையில்டி.டி.ஓ.எஸ் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று வரை அரசு இணையதளங்கள், வாங்கி சேவைகள், ஏடிம் பயன்பாடு ஆகியவற்றில் இந்த சைபர் தாக்குதலை சீனா தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சீனாவின் மத்திய பகுதி நகரமான செங்குடுவிலிருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் அதிகாரிகள்.இந்த செங்குடு பாண்டா கரடிகளுக்கு பெயர் போனது. சீனாவின் மிகப் பெரிய பாண்டா கரடிகள் ஆராய்ச்சி மையம் இங்குதான் அமைந்துள்ளது. சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் தான் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் முக்கியத் தலைமையகம் அமைந்துள்ளது. இது, சீன ராணுவத்தின் முதன்மையான ’இணையப் போர் பிரிவு’ (cyberwarfare section) ஆகும். எனினும் செவ்வாய்க் கிழமையிலிருந்து நடைபெற்று வரும் சைபர் தாக்குதல்கள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. தகவல் திருட்டு, இணையதள முடக்கம் என்று பல்வேறு வகையில் மேற்கொள்ளப்பட்ட சீன ராணுவத்தின் சைபர் அட்டாக்குகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன.
செங்குடு நகரம் ஹேக்கர்ஸ் குழுவினரின் ஹோம் டவுன் ஆகும். இந்த ஹேக்கர்கள் பலரையும் சீன ராணுவம் தான் வேலைக்கு அமர்த்தி பல்வேறு பணிகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் தொடுக்கப்படும் இணையதள தாக்குதல்கள் பொதுவாகப் பாகிஸ்தான், மத்திய ஐரோப்பா அல்லது அமெரிக்க உள்ளிட்ட இடங்களிலிருந்தே தொடுக்கப்படும். ஆனால், செவ்வாய்க் கிழமையிலிருந்து நடத்தப்படும் தாக்குதல்கள் சீனாவிலிருந்து நேரடியாகத் தொடுக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கும் உளவுத்துறை அமைப்பு சீனாவுடன் நேரடியாகத் தொடர்புடைய 52 செயலிகளை முடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்தச் செயலிகள் பாதுகாப்பானவை அல்ல. அவற்றின் மூலம் தரவுகள் கடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
ஜூம் வீடியோ, டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கிளீன் மாஸ்டர், க்செண்டர் உள்ளிட்ட தடை செய்ய வேண்டிய செயலிகளின் பட்டியலும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 52 செயலிகள் மூலம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முடியும் என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறது உளவுத்துறை. அதிகரித்து வரும் சீனா சைபர் தாக்குதலால், டிக்டாக், யூசி புரௌசர் உள்ளிட்ட சீன செயலிகளைப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட விவரங்கள், வங்கித் தகவல்கள் திருடுபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதே சிறந்த முடிவாக இருக்கும். ஸ்மார்ட் தொலைபேசியில் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது என்கிறார்கள் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள்.
Comments