இந்தியா - சீனா பேச்சுவார்த்தை முடிவுகள் எட்டப்படவில்லை

0 5109

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய - சீன ராணுவ மேஜர் ஜெனரல்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் எல்லையிலுள்ள கால்வான் பள்ளத்தாக்கில் திங்களன்று இரவு இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.

சீன ராணுவ தரப்பிலும் அதிகாரி மட்டத்திலான ஒருவர் உட்பட வீரர்கள் 43 பேர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் லடாக் எல்லை விவகாரத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண இந்தியா முன்வர வேண்டும் என சீனா அழைப்பு விடுத்தது.

இதனை ஏற்று மோதல் சம்பவம் நடைபெற்ற கால்வான் பள்ளத்தாக்கு பகுதியிலேயே ராணுவ மேஜர் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வீரர்களை சர்ச்சைக்கு உரிய பகுதியில் இருந்து விலக்கிக் கொள்வது குறித்து உடனடியாக எவ்வித முடிவும் எடுக்கப்படாததால், கள நிலவரத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை எனவும், இதனால் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

வரும் காலங்களில் மேலும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் இல்லாத வகையில் தற்போது நடைபெற்ற கால்வான் மோதல் சம்பவம், இருதரப்பு உறவுகளிடையே தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என புதன்கிழமையன்று இந்தியா காட்டமாக தெரிவித்தது.

மேலும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் Wang Yi உடன் தொலைபேசியில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், சீன வீரர்கள் திட்டமிட்டே கைகலப்பில் ஈடுபட்டதாகவும், அதுவே மோதல் ஏற்பட காரணம் என தெரிவித்துள்ளார்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவும் சீக்கிரம் நிலமையை சுமூகமாக தீர்க்க இருதரப்பும் முன்வந்துள்ளதாக சீன வெளியுறவுத்துறையும் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவேதும் எட்டப்படாத நிலையில், 2வது முறையாக மீண்டும் இந்திய - சீன ராணுவ மேஜர் ஜெனரல்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கிழக்கு லடாக் அருகே கால்வான் பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

1962ம் ஆண்டு போருக்கு பின்னர் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பெரியளவில் ஊடுருவல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடாத சீனா, பிராந்திய ரீதியிலான உரிமை கோரல்களிலும் ஈடுபட்டதில்லை.

ஆனால் தற்போது முழு கால்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கும் சீனா உரிமை கோருவது, இந்திய ராணுவத்துடன் முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படுவது கேள்விக்குறியாகவே உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments