முழு ஊரடங்கின் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும்

0 3864

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், அண்டை மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை நகரிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில பகுதிகளிலும் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நான்கு மாவட்டங்களிலும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.

தமிழக அரசின் இ-பாஸ் பெற்ற பயணிகளுக்காக மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் ஆகியவை விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அவசர மருத்துவத் தேவைகளுக்கும் ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

மாநில அரசுத் துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

துறைமுகங்களில் மருந்துபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கையாள மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்கிய பட்டியல் அடிப்படையில் ஊழியர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு, குறைந்த அளவிலான ஊழியர்களை கொண்டு அந்த நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கின் போது சரக்கு போக்குவரத்துக்கும், எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒரு முறை ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து, மேற்கண்ட 12 நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ, அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேபோல், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு முறை ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படும்.

இந்த 12 நாட்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments