லடாக் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு
லடாக் எல்லையில் மேலும் மோதல்கள் ஏற்படுவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ள சீனா, எல்லை தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா முன் வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கால்வான் பள்ளத்தாக்கு பகுதியின் இறையாண்மை எப்போதும் சீனாவுக்கே சொந்தம் என்றார். மேலும், இந்திய வீரர்கள் எல்லை விவகாரங்கள் தொடர்பான நெறிமுறைகள் மற்றும் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகளை மீறி அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
லடாக் எல்லை தொடர்பான பிரச்சனைகள், முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா முன் வர வேண்டும் என்றும் லிஜியான் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவுடன் தூதரக மற்றும் ராணுவ அதிகாரிகள் மூலம் சீனா தொடர்பு கொண்டுள்ளதாகவும், லடாக் எல்லையில் மேலும் மோதல்கள் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.
மோதல் தங்கள் எல்லைக்குள் ஏற்பட்டதால் பிரச்சனைக்கு தங்களை குற்றம்சாட்டக் கூடாது என்றும், ஊடுருவல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை இந்தியா நிறுத்த வேண்டும் என்றும், சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லிஜியான் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
Comments