உலகின் உச்சத்தில் விமானப்படைத்தளம்... சீனாவுக்குப் பதிலடி கொடுக்க அமைத்த இந்தியா... சீன ஆத்திரத்தின் பின்னணி!

0 21806

எப்போதுமில்லாத அளவுக்கு இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

திங்கள் கிழமை நள்ளிரவில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இறந்திருக்கிறார்கள். இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் சீனா தரப்பில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 - க்கும் மேல் இருக்கும் என்கிற தகவலும் உள்ளது. image

சமீபத்திய ஆண்டுகளில் இந்திய - சீனா இடையே எல்லைப்பகுதியில் அவ்வப்போது மோதல், பிரச்னை இருந்தாலும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதில்லை. ஆனால், சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இந்த உயிரிழப்பானது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.  இந்தப் பதற்றம் இந்தியா சீனா எல்லை முழுவதும் பரவியிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? அதன் வரலாற்றுப் பின்னணியை அறிந்துகொள்வோம்...

சுமார் 4056 கி.மீ அளவுக்கு இந்தியாவும் சீனாவும் எல்லையைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தராகாண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் வரை நீள்கிறது இந்திய - சீனா எல்லை. இந்திய - சீனா எல்லைப் பகுதியானது கிழக்கு, மேற்கு, மத்திய என்று மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இவற்றில் மேற்கு எல்லையான லடாக், மத்திய எல்லையான சிக்கிம், கிழக்கு எல்லைப் பகுதியான அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் தான் இரு தரப்புக்கும் பிரச்னை அதிகமாகிவருகிறது. 

மேற்கே, உள்ள அக்சாய் சின் பகுதி தனக்குச் சொந்தமானது என்று இந்தியாவும் கிழக்கே உள்ள அருணாச்சலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது என்று சீனாவும் உரிமை கோரி வருகின்றன. 1962 - ல் ஏற்பட்ட போரில் அக்சாய் சின் பகுதியைச் சீனா அடாவடியாக  ஆக்கிரமித்துக்கொண்டது. அதன்பிறகு பின்வாங்கவே இல்லை. அக்சாய்  சின் மீதான இந்தியாவின் உரிமையை நிராகரித்துவிட்டது சீனா.  அதோடு, அருணாச்சலப் பிரதேசத்தை திபெத்தின் ஒரு அங்கம் என்றும் சீனா உரிமை கோரி வருகிறது  அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் 1914 - ல் பிரிட்டிஷ் இந்தியா மற்றும் திபெத் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட 'மக்மோஹன்' கோடு ஒப்பந்தத்தை இன்றுவரை சீனா ஏற்க மறுக்கிறது. 1914 - ல் திபெத் தனி நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 1950 - ல் சீனா திபெத்தை முழுவதுமாக கபளீகரம் செய்துவிட்டது.  

இரு நாடுகளுக்கும் இடையே இன்றுவரை சரியான எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு இறுதி செய்யப்படவில்லை. 1965 - ல் நடந்த போருக்குப் பிறகு இந்திய ராணுவம், சீன ராணுவம் எந்த பகுதிகளில் நிலை கொண்டிருந்தார்களே அதை எல்லைக் கட்டுப்பாடு பகுதியாக  இரு நாடுகளும் பின்பற்றி வருகின்றன. இந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் சீன வீரர்கள் மதிக்காமல் அவ்வப்போது அத்துமீறி நுழைவதே பிரச்னைக்குக் காரணமானது.  இதற்குக் காரணம் இரண்டு நாடுகளும் வெவ்வேறு இடங்களைத் தங்களது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு என்று குறிப்பிடுவது தான்!

image

இந்தியா - சீனா இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடானது மலைகள், ஆறுகள், பனிப்பாறைகள், பனிப் பாலைவனங்கள், புல்வெளிகள்  ஊடாகப் பணிக்கிறது. இந்தப் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இடங்களை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும்போது பிரச்னை ஏற்படுகிறது.  தங்களது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரை இரு நாடுகளும் சாலை, பாலங்கள், முகாம்கள்  அமைக்கின்றன. சீனா ஏற்கெனவே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு விரைவாக செல்லும் வகையில் சாலைகள், பாலங்களை ஏற்படுத்திவிட்டது. அதற்குப் பதிலடி அளிக்கும் இந்தியாவும் தற்போது எல்லைப் பகுதியில் தளவாடங்களை விரைவில் கொண்டுசெல்லும் வகையில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கட்டுமானத்துக்குச் சீன எதிர்ப்பு சண்டையிடுகிறது. 


இந்தியா 255 கி.மீ தொலைவிலான சாலையை லடாக் லே நகரிலிருந்து டர்புக், ஷியோக் வழியாக தவ்லத் பேக் ஓல்டி எனும் சீன எல்லையை ஓட்டிய பகுதி வரை  அமைத்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவால் மிக எளிதாக ராணுவத் தளவாடங்களை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரை நகர்த்தமுடியும்.

image

தவ்லத் பேக் ஆல்டி- யில் விமான ஓடுதளம் ஒன்றை அமைத்து  AN 32 ரக விமானங்களை இறக்கி சோதனை செய்து தனது வலிமையை நிரூபித்தது இந்தியா. தவ்லத் பேக் ஆல்டி விமான ஓடுதளம் தான் உலகிலேயே உயரமான விமான ஓடுதளம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 16,614 அடி உயரத்தில் இந்த விமான நிலையம் உள்ளது. 

இத்துடன், இந்திய சீன எல்லையில் உள்ள  பாங்காங்சோ ஏரியானது சுமார் 14,000 அடி உயரத்தில் 135 கி.மீ நீளம் கொண்டது. இந்த ஏரியின் 45 சதுர கி.மீ இந்தியாவிலும் 90 சதுர கி.மீ சீனாவிலும் அமைந்துள்ளது. லடாக் பகுதியில் நடைபெறும் பெரும்பாலான சீன அத்துமீறல்கள் இந்த ஏரியைச் சுற்றியே நடைபெற்று வருகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை முன்வைத்துச் செயல்படுவதால் இந்த பகுதி எப்போதுமே பதற்றமாக இருந்து வருகிறது. எனவே தான் வழக்கமான ரோந்து பணியின் போது கூட மோதல் நிகழ்கிறது. 

1962 - ல் நடந்த போரில் இந்த ஏரியின் வழியைத்தான் சீனா பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதனால் தான், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்த கேந்திரப் பகுதியில் இந்தியாவும் சாலைகள் அமைத்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

image

அடுத்ததாக இந்தியா, சீனா, பூடான் ஆகியவை தமது எல்லையைப் பகிர்ந்துவரும் டோக்லாம் பீட பூமியில் எல்லை தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. டோக்லாம் பீடபூமி இந்தியா, திபெத், பூடான் ஆகியவற்றை இணைக்கும் முக்கியப் பகுதி. இங்கு சீனா சாலை அமைக்க முயற்சி செய்ததற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. டோக்லாம் பகுதிக்குச் சீனாவும் பூடானும் சொந்தம் கொண்டாடுகின்றன. இந்தியா பூடானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இந்த இடம் மிகவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். போர் என்று வந்தால் இந்திய ராணுவத்தால் டோக்லாம் பீட பூமியை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். அதனால், டோக்லாம் பீடபூமியிலும் பிரச்னை இருந்து வருகிறது.

சிக்கிம் மாநிலத்தையும் தெற்கு திபெத்தின் சும்பி பள்ளத்தாக்கையும் இணைக்கும் பகுதி, இமயமலை நாதுலா கணவாயே. இது சிக்கிம் தலைநகர் காங்க்டோக்கிலிருந்து 54 கி.மீ தொலைவில் இருக்கிறது. மேலும், கைலாஷ் மானசரோவருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர்கள்  நாதுலா வழியாகத்தான் பயணம் செல்வார்கள் என்பதால் இந்தியாவுக்கும் மிகவும் முக்கியமான பகுதி இது. கடந்த 1962 - க்குப் பிறகு மூடப்பட்ட  நாதுலா  கணவாய் 2006 - ம் ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது இந்த இடத்திலும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

image

நீண்ட வருடங்களாக நீடித்து வரும் எல்லைப் பிரச்னையைத் தீர்க்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. அந்த பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படுவதைப் போலத் தோன்றினாலும் மீண்டும் மீண்டும் இழுபறியே நீடித்து வருகிறது. கடந்த வருடம் சீன அதிபர் சீ சின்பிங் மாமல்லபுரம் வந்தபோது இரு நாட்டுக்கும் இடையேயான உறவு மேம்பட்டிருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால், அவர் வந்துபோய் ஒரு வருடம் கூட முடிவடைந்திருக்காத சூழலில் எல்லையில் தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 எல்லைப் பிரச்னைகள் தீர்ந்து அமைதி நீடிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எண்ணமாக இருக்கிறது..!  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments