'இன்னும் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வேண்டும்' - வீனஸ் வில்லியம்ஸின் நிறைவேறாத ஆசைகள்
வீனஸ் வில்லியம்சுக்கு இன்று 40 வது பிறந்த நாள். இவரை, ஒரு பெண் லியாண்டர் பயஸ் என்றே சொல்லாம். லியாண்டருக்கு தற்போது 47 வயதாகிறது. ஆனாலும், இன்னும் ஓய்வு பெறவில்லை. இவரைப் போலவே வீனஸ் வில்லியம்சும் இன்னும் ஓய்வு பெறவில்லை. 1980- ம் ஆண்டு பிறந்த வீனஸ் வில்லியம்ஸ்14- வது வயதிலேயே டென்னிஸ் உலகில் கால் பதித்தார். வீனஸ் வில்லியம்ஸ் ஐந்து முறை விம்பிள்டனில் ஒற்றையர் பட்டத்தை வென்றவர். இரண்டு முறை அமெரிக்க ஓபனையும் வென்றுள்ளார். விம்பிள்டன், அமெரிக்க ஓபன், பிரெஞ் ஓபன் , ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் இரட்டையர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
ஆனால், பிரெஞ்சு ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபனில் மட்டும் ஒற்றையர் பட்டத்தை இப்போது வரை வீனஸ் வில்லியம்ஸால் கைப்பபற்ற முடியவில்லை. ஒலிம்பிக்கில் நான்கு முறை தங்கப்பதக்கம் வென்றுள்ள வீனஸ் தன் சகோதரி செரினாவில் ஆதிக்கத்தால் கிட்டத்தட்ட டென்னிஸ் ஓரம் கட்டப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். கடந்த 2002- ம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த வீனஸின் தற்போதைய ரேங்க் 67. 'வயதானாலும் உன்னோட கம்பீரம் போகல!' அப்படினு சொல்ற மாதிரி இன்னும் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல வேண்டிய முக்கிய வேலை இருக்கிறது என்று வீனஸ் வில்லியம்ஸ் சொல்கிறார்.
'' எப்போதுமே நம்முடன் ஒரு கனவு இருக்க வேண்டும். ரோலண்ட் கிராஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்கள் இன்னும் எனக்கு கை கூடாததாகவே இருக்கிறது. பல சமயங்களில் இந்த இரு பட்டங்களையும் நெருங்கி துரதிருஷ்டவசமாக தோற்றிருக்கிறேன். ஆனாலும், இந்த பட்டங்களை வெல்லும் முனைப்பு இன்னும் இருக்கிறது . டென்னிஸ் உலகின் உச்சத்தையும் பார்த்து விட்டென். அடி மட்டத்தை பார்த்து விட்டேன். ஆனால், எப்போதுமே மகிழ்ச்சியாகத்தான் நான் உணருகிறேன்'' என்கிறார்.
கடைசியாக 2008- ம் ஆண்டு விம்பிள்டனில் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றினார். 2017- ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதி ஆட்டம் வரை முன்னேறினாலும், வீனஸால் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை. சொந்த தங்கை செரினாவே 6- 4. 6-4 என்ற நேரடி செட் கணக்கில் வீனஸை தோற்கடித்து அவரின் ஆஸ்திரேலிய ஓபன் கனவை தகர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
Comments