ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட 4 மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
சீன எல்லையில் மோதல் சம்பவத்தை அடுத்து பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த மத்திய அமைச்சர்கள், ராணுவ தளபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது குறித்து இருதரப்பினரும் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கால்வன் பள்ளத்தாக்கில் திடீரென கைகலப்பு நேரிட்டு, கட்டை, கம்பி உள்ளிட்டவற்றைக் கொண்டு இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் இந்திய தரப்பில் அதிகாரி உள்பட 20 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தரப்பில் உயிரிழப்பு, எண்ணிக்கை 43 ஆக இருக்கலாம் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன எல்லையில் 1975ம் ஆண்டுக்கு பிறகு நேரிட்ட மிகப்பெரிய மோதல் இது என்பதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடனும், ராணுவ தளபதி நராவனே ஆகியோருடனும் பிரதமர் மோடி நேற்று இரவு 10 மணி அளவில் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்ட விசயங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், எல்லை நிலவரம் குறித்தும் சீனாவுக்கு பதிலடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் 2 முறை எல்லைத் தாண்டி வந்து தாக்கியதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. எனினும் இதை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எல்லையில் தற்போதைய நிலவரத்தை சீனா மாற்றியமைக்க முயற்சித்ததாகவும், இதனாலேயே மோதல் நேரிட்டதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments