லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம்
சீன எல்லைப் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சீனாவின் தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்தும், படுகாயமடைந்தும் இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
லடாக்கில் கடந்த சில வாரங்களாக சாலைப் பணிகள் அமைப்பது, ஆயுதம் தாங்கிய வாகனங்களை நிறுத்துவது என சீனா தொடர் காரியங்களைச் செய்து வந்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாட்டு வீரர்களும் தங்களின் துருப்புக்களை விலக்கி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் இரவு முதல் நடந்த மோதலில் இருதரப்பு வீரர்களும் கற்கள் மற்றும் இரும்புக் கம்பிகளால் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.
மோதல் நடந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து மிக அதிகமான உயரத்தில் இருப்பதுடன், தட்பவெப்பநிலை பூஜ்யத்திற்கு கீழ் இருந்ததால் காயமடைந்த 17 வீரர்கள் பலியானதாகவும், அதனால் உயிரிழப்பு 20 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் பேணி பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த மோதலில் சீன தரப்பில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயம் அடைந்தோர் எண்ணிக்கை, 43 பேர் வரையில் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
உயிரிழந்த வீரர்களின் உடல்களை கொண்டு செல்லும் விதத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர் செயல்பாடு அதிகரித்து காணப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து இரு தரப்பு ராணுவத்தினரும் விலகிவிட்டதாகவும் தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
53 ஆண்டுகள் கழித்து இருதரப்பினரும் நேருக்குநேர் மோதிக்கொண்ட மோசமான நிகழ்வு என்று கூறப்படுகிறது.
Comments