நெருக்கடியில் டாடா ... ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் 1, 100 பேர் பணி நீக்கம்

0 6625


பிரிட்டனில் உள்ள  டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் 1, 100 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் முழுக்க உள்ள பிரபல கார் நிறுவனங்கள் இப்போதுத் முழு வீச்சில் உற்பத்தியில் இறங்கவில்லை. பல நிறுவனங்கள் மூடியே கிடக்கின்றன. லாக்டௌன் செய்யப்பட்ட மூன்று மாதத்தில் மட்டும் 30.9 சதவிகித விற்பனை இழப்பை லேண்ட் ரோவர்  நிறுவனம் சந்தித்தது. கடந்த மார்ச் மாதம் வரை ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

இதனால், ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 30 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யப்பட்டது. நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், 1,100 தற்காலிக பணியாளர்களை ஜூலை மாதத்துக்கு பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 7,500 கோடி மிச்சம் பிடிக்க முடியும் என்று ஜாகுவார் நிறுவனம் கருதுகிறது. அது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு முழுவதுமே பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து ஜாகுவார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பி.பி. பாலாஜி கூறுகையில், '' வரும் 2021 மார்ச் மாதத்துக்குள் 42,000 கோடியை மிச்சம் பிடிக்க ஜாகுவார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது வரை, 30,000 கோடி வரை மிச்சம் பிடித்துள்ளோம்'' என்று கூறியுள்ளார். டாடா மோட்டார்ஸ்க்கு முக்கிய வருவாய் தரும் பிரிவாக இருப்பது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம்.

தற்போது, சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஜாகுவார் லேண்ட் ரோவர் வகை கார்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்திருப்பதாக அந்த  நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2010- ம் ஆண்டு முதல் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரால்ஃப் பெட்ச் வரும் செப்டம்பர் மாதத்துடன் பதவியிலிருந்து விலகுகிறார். ஜாகுவார் நிறுவனத்துடனான ஓப்பந்த காலம் அவருக்கு முடிவடைதால் அந்த நிறுவனத்தை விட்டு அவர் வெளியேற முடிவு செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments