லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்
லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், ராணுவ வீரர்கள் 2 பேரும் இந்த மோதலில் வீர மரணம் அடைந்துள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் ஏரிப்பகுதி ஆகிய எல்லைப்பகுதிகளில் இந்திய, சீன துருப்புக்கள் குவிக்கப்பட்டு பதற்றம் அதிகரித்த நிலையில், அதை தணிக்க இருதரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதை அடுத்து அங்கிருந்து சீன படைகள் பல கிலோமீட்டர் தூரம் பின்வாங்கியதாகவும், இந்திய துருப்புகள் வழக்கமான ரோந்துப்பணிகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கால்வான் பள்ளத்தாக்கு எல்லையில் இருதரப்பு படைகளும் அமைத்திருந்த தற்காலிக தங்குமிடங்களை நேற்று மாலை அகற்றும் பணி நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பு வீரர்களுக்கும் இடையை மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அது வலுத்த நிலையில் இரு தரப்பு வீரர்களும் ஒருவரை ஒருவர் கைகள், கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இந்திய தரப்பில் ராணுவ அதிகாரி ஒருவரும், ஜவான்கள் இரண்டு பேரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
சீன தரப்பில் 4 பேரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவினாலும், 1975 க்குப் பிறகு முதன்முறையாக உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது.
Comments