நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,667 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் மேலும் 10 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா கண்டறியப்பட்டோர், கொரோனாவுக்கு பலியானோர் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் காலையில் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,667 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், மேலும் 380 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 91ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 900ஆகவும் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 1 லட்சத்து 80 ஆயிரத்து 13 பேர் மருத்துவ சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் கொரோனா மையமாக திகழும் மகாராஷ்டிராவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 744ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 128ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 46,504ஆகவும், டெல்லியில் 42 ஆயிரத்து 829ஆகவும், குஜராத்தில் 24 ஆயிரத்து 55ஆகவும் அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் 13 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், ராஜஸ்தானில் 12 ஆயிரத்தையும், மேற்குவங்கத்தில் 11 ஆயிரத்தையும், மத்திய பிரதேசத்தில் 10 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதேபோல் பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
Comments