சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் தீவிர முயற்சியில் கேரளா... கோவை மண்டலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

0 1049

கொரோனா ஊரடங்கைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கேரள அரசு,  சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் அணைக்கட்டும் முயற்சியில் தீவிரமாகியிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டம் மூலம் 2.87 டிஎம்சி தண்ணீரை 4255 ஹெக்டேர் தரிசு நிலம், தொழில் நிறுவனங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளக் கேரள அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது கேரள அரசு. இந்தத் திட்டம் மூலம் கோவை மண்டலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

கோவை மண்டலத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானி நதியின் கிளை நதியான சிறுவாணி. கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் சிறுவாணி ஆற்றில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாகப் பாய்ந்து தமிழகத்தின் கூடுதுறை எனுமிடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது.

image

சிறுவாணி ஆற்றுக்குக் குறுக்கே அட்டப்பாடி வனப் பகுதியில் அணை கட்ட பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது கேரளா அரசு. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு மற்றும் பொது மக்களின் எதிர்ப்பையடுத்து இந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

தற்போது கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் அணைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சிறுவாணி ஆற்றுக்குக் குறுக்கே 450 மீட்டர் அகலம், 52 மீட்டர் உயரத்தில் இந்த அணை அமைக்கப்படுகிறது. 74.27 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் கைப்பற்றப்பட்டு இதற்கு மாற்றாக வேறு இடத்தில் நிலம் வழங்கவிருக்கிறது. 294 ஹெக்டேர் தனியார் நிலங்கள் ஏற்கெனவே கைப்பற்றப்பட்டுவிட்டன. கேரள அரசின் இந்தத் திட்டம் மட்டும் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் சிறுவாணி ஆற்று நீர் முழுவதையும் கேரளாவே பயன்படுத்திக்கொள்ளும் நிலை ஏற்படும். கோவை மண்டலத்தில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும்.

image

கடந்த மாதத்தில், சிறுவாணி அணையில் 'இன்டேக் டவர்' அருகே உள்ள குழாயை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறுவாணி ஆறு உற்பத்தியாகும் அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் அணைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் திட்டத்துக்குச்  சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள், காலநிலை மாற்றம்  அமைச்சகம் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்குள்ளாகவே கேரள அரசு அணைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கேரள அரசின் அணைக்கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே கோவை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது...

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments