சமூகம் என்ற நாலு பேருக்காக தற்கொலை! சுசாந்த் சிங்கின் மரணம் போல பேசப்பட்டிருக்க வேண்டிய புதுக்கோட்டை இறப்பு
பாலிவுட் நடிகர் சுசாந்த்சிங் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்களின் இறப்பு ஏற்படுத்தும் தாக்கத்தை போல சாமானியர்கள் தற்கொலை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தற்கொலைக்கு என்ன காரணமாக இருந்தாலும் நமது மனம் சாதாரணமாக கடந்து போய்விடும். சமூகம் என்ற அந்த நாலு பேருக்கு பயந்து புதுக்கோட்டையில் இரு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உண்மையிலேயே மனதை பெரியளவில் பாதித்தது. விவசாதிக்க கூடிய தற்கொலை. இதுபோன்ற தற்கொலைகள் நிச்சயம் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். சரி... செய்திக்கு போகலாம்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவரின், மனைவி ஜெயதீபா. கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்துள்ளார் ஜெய தீபா. இந்த தம்பதிக்கு விக்னேஷ்வரன் (வயது 22) லோகேஷ்வரன் (வயது 19) என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவருமே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஜெயதீபா வட்டிக்கும் பணம் கொடுத்து வாங்குவதை தொழிலாக செய்துள்ளார். அப்போது சண்முகம் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை பெற்றோரும் மகன்களும் கண்டித்துள்ளனர். இதனால், கடந்த வாரத்தில் வீட்டிலிருந்த பணம், நகைகளை எடுத்துக் கொண்டு சண்முகத்துடன் ஜெயதீபா வேறு எங்கோ சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. தாயின் இந்த செயலால் மகன்கள் இருவரையும் அவமானமடைந்தனர். 'அவர்கள் அப்படி பேசுவார்களே, இவர்கள் அப்படி பேசுவார்களே!' என்று மனதுக்குள் குமைந்தனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாளானார்கள். இந்த நிவையில், உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த அந்த இளைஞர்கள் தங்களுக்கு என்ன பேசிக் கொண்டார்களோ , தெரியவில்லை , தங்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர், வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டனர்.
இருவரும் இளைஞர்கள். வாழ வேண்டிய வயது. இக்கட்டான சூழலில் அவர்களுக்கு கைகொடுக்கவும் மனதளவில் தயார்ப்படுத்திக் கொள்ளவும் இந்த சமூகத்தை எதிர்கொள்ள தேவையான மன வலிமையை கொடுப்பது பற்றி யாருமே யோசிக்கவில்லை. இளைஞர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்களை கண்காணிப்புடன் வைத்திருக்க வேண்டும் தேவவையான கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். என்கிற எண்ணமும் உறவினர்களிடத்தில் இல்லாமல் போனதும் இளைஞர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது.
இந்த சம்பவம் குறித்து மனநல மருந்துவர் டாக்டர். அசோகனிடத்தில் பேசிய போது, '' இளைஞர்களின் தாய் செய்த காரியம்நிச்சயம் மனதுக்கு வேதனையை தரக்கூடியதுதான். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது, தற்கொலை செய்து கொண்டதால் இந்த சமூகம் பேசாமலா இருந்து விடப் போகிறது. முதலில் நாம் நமக்காக வாழப் பழக வேண்டும். ஆனால், நாம் மற்றவர்களுக்காகவே வாழ பழகிக்கொண்டுளோம். சமூகத்தில் யார் என்ன பேசினால் என்ன? எல்லாவற்றுக்கும் காலம் ஆறுதல் தரும். இந்த இளைஞர்கள் வேறு ஏதாவது ஊரில் சென்று கூட வாழத் தொடங்கியிருக்கலாம். நம்மை பார்க்கிறவர்கள் எல்லாம் நம்மை குத்தி கிழிப்பார்கள் என்று நினைக்க கூடாது. ஆறுதல் தரும் மனிதர்களும் இரக்கம் நிறைந்த மனிதர்களும் இந்த சமூகத்தில் நிறைந்துள்ளனர் என்பதை மறந்து விடக் கூடாது.
இதே போன்ற ஒரு சம்பவம் என்னிடத்தில் வந்தது. நன்றாக படிக்கக் கூடிய இளைஞர் ஒருவர் என்னிடத்தில் தன் தாயை அழைத்து வந்தார். அந்த தாய் தெருவில் உடைகள் கிழிந்த நிலையில் கிடந்துள்ளார். சற்று மன நிலையும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த பெண்ணும் 45 வயதில் இன்னோரு ஆணுடன் ஓடிப் போனவர். காமம் கரைந்த பிறகு, தெருவில் வீசப்பட்டார். தெருவில் கிடைப்பதை சாப்பிட்டு வந்தவர் ஏதோச்சயாக அவரின் மகன் கண்ணிலேயே அவர் பட்டிருக்கிறார். பிறகு, தன் தாயை என்னிடத்தில் சிகிச்சைக்கு அழைத்து வந்தார். நான் அந்த இளைஞரின் செயலைக் கண்டு வியந்து போனேன். 'சார்.... என்ன இருந்தாலும் இந்த வயிற்றில்தான சார் நான் பிறந்தேன்!' என்று தன் தாயின் வயிற்றை தடவியவாறே என்னிடத்தில் சொன்ன போது உண்மையில் நான் மனம் நெகிழ்ந்து போனேன். இந்த மன முதிர்ச்சி மட்டும் ஒவ்வொருவரிடத்திலும் இருந்து விட்டால் தற்கொலை என்ற பேச்சுக்கே இந்த சமூகத்தில் இடமிருக்காதே...! '' என்று முடித்தார்.
சமூகம் நீங்கள் நல்லா இருந்தாலும் பேசும்... இல்லையென்றாலும் பேசும். அதை புறந்தள்ளிவிட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்!
Comments