முன்னாள் அமைச்சரின் மூத்த சகோதரரிடம் ரூ.20 லட்சம் வரி வசூல்..! காய்கறிமார்க்கெட் விவகாரம்

0 6060

தூத்துக்குடியில் 4 வருடமாக  மாநகராட்சிக்கு வரிகட்டாமல் இயங்கி வந்த முன்னாள் அமைச்சரின் சகோதரரை தலைவராக கொண்ட காய்கறி மார்க்கெட் நிர்வாகத்திடம் இருந்து 20 லட்சம் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சினா.தானா. செல்லப்பாண்டியனின் சகோதரர் சுந்தரபாண்டியனை தலைவராக கொண்டு தனியாருக்கு சொந்தமான காய்கறி மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்த காய்கறி மார்க்கெட்டில் 137 கடைகள் இருந்த நிலையில் ஒவ்வொரு கடைக்கும் தினமும் 1500 ரூபாய் வரை வாடகை வசூலித்து வந்த மார்க்கெட் நிர்வாகம் 70 ரூபாய்க்கு மட்டுமே ரசீது வழங்கியுள்ளது. மேலும் இந்த மார்க்கெட்டில் 14 கடை மட்டுமே இருப்பதாக முறைகேடாக கணக்கு காண்பித்து ஆண்டு வரியாக 70 ஆயிரம் ரூபயை மட்டுமே மாநகராட்சிக்கு வரியாக செலுத்தி வந்துள்ளனர். மேலும் கடந்த 4 வருடங்களாக ஒரு பைசா கூட வரி கொடுக்காமல் இருந்ததை மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் கண்டுபிடித்தார்.

மார்க்கெட்டில் முறையாக வரி வசூலிக்காமல் சினா. தானா. சுந்தர பாண்டியனுக்கு உடந்தையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் இருவரையும் சஸ்பெண்டு செய்து ஆணையர் ஜெயசீலன் உத்தரவிட்டார். மேலும் மார்க்கெட் நிர்வாகம் சார்பில் வரி பாக்கி என்று 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை செலுத்த சென்ற போது அதனை பெற மறுத்த மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், முறையாக கணக்கிட்டு வரி வசூலிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் அவர்களிடம் வாடகை வசூலித்த கணக்குகள் முறையாக இல்லாததால், மார்க்கெட் வருமானம் என்று கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் வருமான வரி தாக்கல் செய்த தொகையில் இருந்து 25 சதவீதத்தை வரியாக வசூலிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி சினா. தானா. சுந்தரபாண்டியனிடம் இருந்து 20 லட்சத்து 49 ஆயிரத்து 207 ரூபாயை வரியாக வசூலித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இளம் அதிகாரியான ஜெயசீலன் அரசியல் செல்வாக்கிற்கு வளைந்து கொடுக்காமல் இந்த நடவடிக்கையை எடுத்ததால் இந்த வரியை வசூலிக்க முடிந்ததாக வியாபாரிகள் பாராட்டி வருகின்றனர்.

ஆரம்பத்தில், இந்த வரி வசூல் முறைகேடு தொடர்பாக விளக்கம் அளித்த சினா.தானா.சுந்தரபாண்டியன் தனது தம்பி செல்லப்பாண்டியன் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மார்க்கெட் மீது முறைகேடு புகார் கூறப்பட்டதாக தெரிவித்திருந்தார்.


மார்க்கெட்டில் தான் இயக்குனராக இல்லை என்றும் மகன் பெயரில் பங்கு வைத்துள்ளதாகவும், அங்கு வாழைக்காய் கமிஷன் மண்டி மட்டுமே நடந்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் சினா.தானா.செல்லப்பாண்டியன், தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது பழைய பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வந்தாலும், வருங்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறான இடத்தில், இயங்கி வரும் இந்த தனியார் காய்கறி மார்க்கெட்டை ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னர் அரசுக்கு சொந்தமான இடத்திற்கு நிரந்தரமாக மாற்றி வியாபாரிகளுக்கும். விவசாயிகளுக்கும் சமூக இடைவெளியுடன் வந்து செல்ல வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அதிசயகுமார் என்பவர் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக முதல்வருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments