மானத்தை காக்க உடலில் தீவைத்துக் கொண்ட மாணவி..! பிளாக் மெயிலர்ஸ் அட்டூழியம்

0 17190

வேலூர் மாவட்டம் பாகாயம் அருகே, தென்னை ஓலை மறைவில் குளிப்பதை, செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியவர்களுக்கு பயந்து மாணவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாக்மெயில் கும்பலுக்கு பணம் கொடுக்க இயலாமல், மானத்தைக் காப்பாற்ற உயிரையே மாய்த்துக்கொள்ள முயன்ற ஏழைச் சிறுமியின் சோக முடிவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவரது சித்தப்பாவின் செல்போன் நம்பருக்கு சம்பவத்தன்று அழைப்பு வந்துள்ளது. அதனை எடுத்து பள்ளி மாணவி பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர், வாட்ஸ் நம்பருக்கு தான் ஒரு வீடியோவை அனுப்பியுள்ளதாகவும், அதைப் பார்த்து விட்டு பேசுமாறும் சொல்லி இணைப்பைத் துண்டித்துள்ளான்.

வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்த்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டின் பின் பக்கம் உள்ள தென்னை ஓலையால் மறைக்கப்பட்ட குளியலறையில் தான் குளிப்பதை யாரோ செல்போன் காமிரா மூலம் படம் பிடித்திருப்பதைக் கண்டு மிரண்டு போனார் மாணவி.

மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட அந்த கும்பல், இந்த வீடியோவைத் தர வேண்டும் என்றால், தாங்கள் சொல்லும் இடத்துக்கு வருமாறு கூறி மிரட்டியுள்ளது. பதற்றத்தில் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்ற மாணவியிடம் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது.

அங்கிருந்து தப்பி வந்த மாணவிக்கு மீண்டும் போன் செய்து மிரட்டிய அந்த கும்பல், 5 ஆயிரம் ரூபாய் பணம் தராவிட்டால் வீடியோவை வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பிவிடப் போவதாக பிளாக் மெயில் செய்துள்ளது.

தாங்கள் விரும்பும்போது அழைத்த இடத்துக்கு வர மறுத்தாலும் வீடியோவை பரப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த கொடுமையை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க இயலாமல் தவித்த மாணவிக்கு, வீடியோ குறித்து விவரம் அறிந்த வேறு சில இளைஞர்களும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் கடுமையான மன வேதனையடைந்த சிறுமி, சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் துடித்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பலத்த தீக்காயங்களுடன் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .

90 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையினரிடம் மரண வாக்கு மூலம் அளித்தார். அதன் அடிப்படையில் சிறுமியின் தந்தை பாகாயம் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், தாமஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இது போன்று மிரட்டலுக்குள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுமிகள் துணிச்சலுடன் காவல்துறையினரை நம்பி புகார் அளித்தால் உறுதியான நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயாராக உள்ளனர்.

தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள். இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு பிரத்யேகமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments