மெட்ராஸ் சலூனிலும் கொரோனாவாம்.. விரக்தியில் விளாத்திக்குளம்..!

0 6734

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் மெட்ராஸ் சலூன் என்ற கடையில் முடி திருத்தம் செய்த வட மாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு முடிதிருத்தம் செய்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தின் வணிகவளாகத்தில் மாடியில் செயல்பட்டு வந்த மெட்ராஸ் சலூன் கடையில் சாஜித் சல்மான் என்ற 23 வயது வடமாநில இளைஞர் வேலைபார்த்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பும், அறிவிக்கப்பட்ட பின்னரும் சாஜித் அவரது சொந்த ஊருக்கோ, அல்லது வேறு இடங்களுக்கோ செல்லவில்லை என்று கூறப்படும் நிலையில் அவர் உள்ளூரில் தங்கியிருந்த வீட்டிற்கு மட்டுமே சென்று வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, சலூன் கடைகள் திறந்ததை தொடர்ந்து வடமாநில இளைஞர் சலூன் கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இதற்கிடையில் சாஜித்துக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரது சளிமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் பணிபுரிந்த சலூன் மற்றும் அவர் தங்கியிருந்த வீடு உள்ளிட்ட இடங்களை வருவாய்த் துறை, சுகாதாரத்துறை பேரூராட்சி மற்றும் காவல்துறையினர் கிருமி நாசினி தெளித்து சீல் வைத்துள்ளனர்.

அந்த வணிக வளாகமே கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெருக்கள் கடைகள் முழுவதும் கிருமி நாசினி தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது சலூன் கடை இருந்த வணிகவளாகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சலூனில் முடி வெட்ட வந்த அனைவரும் தாங்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு 5 ந்தேதியில் இருந்து 14 ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் முடிதிருத்தம் செய்தவர்கள் தொடர்பு கொள்ள பிரத்யேக செல்போன் எண்களையும் சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து முடி திருத்திக் கொள்ள வந்து சென்ற விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் பத்மநாதன் உள்பட 15-க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களிடம் தனிமைபடுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

10 மாதங்களாக எங்கும் செல்லாத சாஜித்துக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பது உறுதியாகாத நிலையில், சலூன் கடையில் ஏசி பயன்படுத்தப்பட்டதால் முடிவெட்ட வந்த நபரிடம் இருந்து சாஜித்திற்கு பரவி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விளாத்திகுளம் பகுதியில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் சுற்றித் திரிவது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments