'இதயத் துடிப்பு ' போன்று சிக்னல்கள்.... கருந்துளை வெளியிடும் ரகசியம்! ஆய்வை துரிதப்படுத்தும் வானியல் ஆய்வாளர்கள்

0 11694

சூப்பர்மாசிவ் கருந்துளையை ஆராய்ச்சி செய்துவரும் வானியலாளர்கள் , பத்து வருடங்களுக்குப் பிறகு கருந்துளையிலிருந்து வெளிப்படும் இதயத் துடிப்பானது வலிமையாகியிருக்கிறது; மேலும், நீண்ட நேரம் அதன் துடிப்பை உணர முடிகிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.

image

கருந்துளையைச் சுற்றி ஏற்படும் துடிப்பினால் உருவாகும் சிக்னல்களையே வானியலாளர்கள் கருந்துளையின் இதயத்துடிப்பு என்று கூறுகிறார்கள். பூமியிலிருந்து 600 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால், கேலக்சியின் மையத்தில் உள்ள கருந்துளையிலிருந்து 2007 - ம் ஆண்டு தான் முதல் முதலில்  இதயத்துடிப்பு போன்ற சிக்னல் உணரப்பட்டது. சூரியனால் இந்த சிக்னல்கள்  சில வருடங்கள் தடையானது. தற்போது இந்த சிக்னல்கள் மீண்டும் கேட்கத் தொடங்கியிருப்பதால், வானியல் ஆய்வாளர்கள் அவற்றை பதிவு செய்து வருகின்றனர். 


சீன அறிவியல் அகாடமி, சீனா மற்றும் இங்கிலாந்து பல்கலைக்கழக வானியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒருமுறை ராட்சச கருந்துளையிலிருந்து பெறப்பட்டுவந்த இந்த சிக்னல்  2011 - ம் ஆண்டுக்கு முன்பு வரை பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு பதிவுசெய்ய முடியவில்லை. ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சியின் XMM  - நியூட்டன் எக்ஸ் - ரே செயற்கைக்கோள் மீண்டும் இந்தக் கருந்துளையின் சிக்னலை  2018 - ல் பதிவு செய்தது. இந்த சிக்னல்கள் மனிதனின் இதயத் துடிப்பைப் போன்றே இருப்பதைக்கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.  

image

நட்சத்திரம் மற்றும் கோள்களிலிருந்து திட, திரவ, வாயுப் பொருள்கள் சூப்பர்மாசிவ் கருந்துளையின் அதீத ஈர்ப்பு சக்தியால் மையத்தை நோக்கி இழுக்கப்படும். அப்போது இந்தப் பொருள்கள் கருந்துளை மையத்தில் உணவாக்கப்படும்போது கருந்துளையைச் சுற்றிலும் 'கருந்துளை வட்டு' உருவாகி அளவில்லாத ஆற்றல் வெளிப்படும், இந்த நிகழ்வானது தொடர்ந்து நடைபெறும்போது அவை சிக்னல்களாக  வெளிப்பட்டு இதயத் துடிப்பைப் போன்ற சத்தத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு துடிப்பக்கும்  இடைப்பட்ட கால அளவீட்டைக் கொண்டு கருந்துளைக்கு எவ்வளவு அருகில் பொருள்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இங்கிலாந்தில் உள்ள துர்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் க்றிஸ் டோன், "கருந்துளை வட்டு விரிவடையும் போதும் சுருங்கும் போதும் உருவாகும் சமிக்கையே இதயத் துடிப்பாகப் பதிவு செய்யப்படுகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

image

தேசிய வானியல் ஆய்வகத்தைச் சேர்ந்த முனைவர் சிசுன் ஜின் கூறுகையில், "இந்த இதயத் துடிப்பு அதியற்புதமாக இருக்கிறது. சூப்பர் மாசிவ் கருந்துளையிலிருந்து உருவாகும் இந்தத் துடிப்பானது மிகவும் வலிமையாகவும் நிலையாகவும் இருக்கிறது. இந்தத் துடிப்பு கருந்துளைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளத் துணைபுரியும்" என்று கூறியிருக்கிறார்.

புதிராக விளங்கும் இந்த சிக்னலை  ஆய்வு செய்து அண்டவெளி மண்டலத்தில் உள்ள பிற ஸ்டெல்லர் - மாஸ் கருந்துளைகள் செயல்படும் விதத்தைக் கண்டறிய முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள், விஞ்ஞானிகள். இந்த இதயத் துடிப்பானது கருந்துளைகள் பற்றிய மர்மங்களை அகற்ற உதவும்  என்று நம்பப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments