தமிழகத்தில் கொரோனா உச்சத்தை எட்டியது; தளர்வுகளை கடினமாக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை
தமிழகத்தில் கொரோனா நோய்ப் பரவல் இப்போது உச்சநிலைக்கு வந்துள்ளது என்றும், இனி குறையத் தொடங்கும் என்றும் மருத்துவ வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையில், தளர்வுகளை கடினமாக்க, முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் வல்லுநர் குழு கூறியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழு, 5ஆவது முறையாக இன்று முதலமைச்சரை சந்தித்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற கலந்தாலோசனையில் தற்போதைய நிலைமை, எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி அலசி ஆராயப்பட்டது.
உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த வல்லுநர்கள் சௌம்யா சுவாமிநாதன், அருண்குமார், பிரதீபா ஆகியோர் காணொலி மூலம் இதில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழுவினர், நோய்ப் பரவலை தடுப்பதற்கான வழிகளை கலந்தாலோசித்ததாக தெரிவித்தனர்.
சென்னையில் 4, 5, 6ஆவது மண்டலங்களில் நோய்ப்பரவல் அதிகரித்து காணப்படுவதாக மருத்துவ வல்லுநர் குழு தெரிவித்தது. சிகிச்சை அளிப்பதற்கு தயாராக, மருத்துமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன என்றும், காத்திருக்கும் நேரத்தில் ஹைப்பாக்சியா மூச்சுத் திணறல் வராமல் மாஸ்க் வைத்து சிகிச்சை அளிக்க வழிமுறைகள், எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய், டிபி, டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள் மத்தியிலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியிலும்தான் இறப்பு சதவீதம் அதிகம் உள்ளதாக மருத்துவ வல்லுநர் குழு தெரிவித்தது.
தளர்வுகளை கடினமாக்கி, மக்கள் மத்தியில் நோய்ப் பரவலை தடுக்க முடியும் என ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அரசு பரிசீலித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
உச்சத்தை எட்டியுள்ள கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர் குழு தகவல்
— Polimer News (@polimernews) June 15, 2020
சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கவனித்து வருகிறோம் - மருத்துவ நிபுணர் குழு #TNCoronaUpdate #TNFightsCorona #Chennai #globalpandemic
Comments