சால்மன் மீனா அல்லது கத்தியா? சந்தேகத்தில் மூடப்பட்ட பிஜீங் சந்தை... சீனாவில் மீண்டும் கொரோனா பரவிய பின்னணி!

0 9371


சீனாவில் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக சொல்லப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவிய வூகான் நகரம் முற்றிலும் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதாக சீன சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பீஜிங் நகரில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 45 பேரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இவர்களுக்கு அறிகுறிகள் இல்லை. இதனால் , அதிர்ச்சியடைந்த சீன அரசு பீஜிங் நகரின் சில பகுதிகளை லாக்டௌன் செய்துள்ளது.

பீஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி மார்க்கெட்டுக்கு சென்றவர்கள்  கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் மீன்களை வாங்கியவர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. சால்மன் மீன்களில் இருந்து பரவியதா அல்லது அதை வெட்ட பயன்படுத்தப்பட்ட கத்தியிலிருந்து வைரஸ் பரவியதா என்று சீன அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

சீன தொற்று நோய் மற்றும் நோய் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோய் ஆய்வாளர் வூ சுன்யூ கூறுகையில், '' தற்போதைக்கு  சந்தையில் எங்கிருந்து கொரோனா தொற்று பரவியது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. . சால்மன் மீன்களும் நோயை பரப்பியதாக சொல்ல முடியாது. ஏனென்றால், அவற்றை வெட்டப்பட்ட  கத்தியிலும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர் அல்லது அந்த கத்திகளை கொண்டு வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருந்திருக்கலாம் '' என்று தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பாலூட்டிகளிடத்தில் இருந்துதான் எளிதாக பரவும் . சால்மன் மீன்களிடத்தில் இருந்து பரவ வாய்ப்பில்லை எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்து ஷிங்குவா பல்கலைக்கழக வைராலஜி பேராசிரியர் செங் செங் கூறுகையில், '' கொரோனா வைரஸ் உடலில் எளிதாக ஒட்டிக் கொள்ளக் கூடிய மூலங்கள் பாலுட்டிகளித்தில்தான் உள்ளன. மீன்களிடத்தில் இருப்பதாக இதுவரை அறியப்படவில்லை. லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், கொரோனா வைரஸ் பாலூட்டிகளை பாதிக்கக்கூடும். மீன்கள் , பறவைகள் அல்லது ஊர்வன வழியாக பாதிப்பை ஏற்படுத்தாது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார். 

சீன மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சோங் கைய் கூறுகையில், '' உணவு மற்றும் குடிநீர் வழியாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் மீன்கள் குளிரூட்டப்பட்ட இடத்தில் இருந்து சந்தைக்கு எடுத்து வரப்பட்டிருக்கலாம். சால்மன் மீன்கள் வைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் காரணமாக தரைப் பகுதியில் வைரஸ் ஒட்டியிருக்கலாம்.  அப்படி ஒட்டிக் கொள்ளும் கொரோனா வைரஸ் தரைப்பகுதியில் நீண்ட நாள்கள் வாழ வாய்ப்பு இருக்கிறது. அப்படித்தான் சால்மன் மீன்களில் வைரஸ்  வந்திருக்க கூடும். ஆனால், அதற்கான வாய்ப்பும் மிகவும் குறைவு. வௌவால்கள், எறும்புத்திண்ணிகள் போல மீன்களிடத்தில் இயற்கையாகவே  கொரோனா வைரஸ் இருப்பதில்லை. எனினும் சால்மன் மீன்களை பச்சையாக உண்ணாதீர்கள் '' என்று சீன மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதற்கிடையே, 'குளோபல் டைம்ஸ் ' வெளியிட்டுள்ள செய்தியில், ''சால்மன் மீன்களின் மொத்த விற்பனையாளரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் , சந்தை முற்றிலும் மூடப்பட்டுள்ளது '' என்று கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments