கொரோனாவை வென்ற.. 95 வயது சுதந்திர போராட்ட தியாகி..! நலம் பெற்று வீடு திரும்பினார்

0 3411

கொரோனா தொற்று பாதித்த இளம் வயதினர் பலர் உயிரிழந்துள்ள சூழலில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 95 வயது சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவர் உடல்நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார் .

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை எகிறிவரும் நிலையில், உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன. 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் மட்டுமின்றி அண்மை நாட்களாக இளைஞர்களும் கொரோனாவின் கொடிய தாக்குதலுக்கு உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் விடுதலைப்போரில் நேதாஜியுடன் களம்கண்ட 95 வயது தியாகியான வி.கே. செல்லம் என்பவர் கொரோனா நோய் தொற்றில் இருந்து விடுபட்டு வீடுதிரும்பியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரால் கவுரவிக்கப்பட்டவரான தியாகி வி.கே.செல்லம் சென்னை வியாசர்பாடியில் தனது கூட்டுக்குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

மாநகராட்சியில் பணிபுரிந்துவரும் இவரது மகன் திருநாவுக்கரசு கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கும், அவரிடம் இருந்து தியாகி செல்லத்துக்கும் வீட்டில் உள்ள மேலும் 8 பேருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 40க்கும் மேற்பட்டோரைக் கொண்ட பெரியகுடும்பம் என்பதால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா பாதிப்புக்குள்ளான தியாகி செல்லம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 5ந்தேதி சேர்க்கப்பட்டார். அரசு மருத்துவர்களின் அறிவுரையின்படி முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டதால் உடல்நலம்பெற்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவருடன் அனுமதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் குணமடைந்தனர்.

சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்களுக்கும், தன்னை மருத்துவமனையில் சேர்க்க உதவிய திமுக சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரனுக்கும் தியாகி செல்லம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

95 வயதிலும் தினமும் காலையும் மாலையும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக செய்து வரும் தியாகி செல்லம், மீன், நாட்டுக்கோழி, ஆட்டிறைச்சி ஆகியவற்றை உண்டு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது மகன் தெரிவித்தார்.

உடலையும் மனதையும் வலிமையுடன் வைத்துக் கொண்டால், எந்தவயதிலும் கொடிய நோய்களை உடலைவிட்டு விரட்டியடிக்க முடியும் என்பதற்கு தியாகி செல்லமும் ஒரு உதாரணம்..! 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments