செல்ஃபி ஆசை, ரேடியோவில் பேட்டி... மெஸ்ஸியை தொட முயன்ற ரசிகரால் மிரண்டு போன போலீஸ்!

0 2558

கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய நாடுகளுல் ஸ்பெயினும் ஒன்று. இதனால், லா லீகா உள்ளிட்ட அத்தனை கால்பந்து தொடர்களும் மூன்று மாதங்களுக்கு முன்னரே நிறுத்தப்பட்டு விட்டன. இதற்கிடையே, ஜெர்மனி பந்தஸ்லீகா தொடர் ஆட்டங்கள் நடக்கத் தொடங்கின. ரசிகர்கள் இல்லாத வெற்று மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் 229 பேர் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர். இதே பாணியை பின்பற்றி லாலீகா தொடர் நேற்று தொடங்கியது. பிரீமியர் லீக் கால்பந்து தொடர் 17- ந் தேதி தொடங்குகிறது.

லாலீகா தொடரில் நேற்று பார்சிலோனா அணி மல்லார்கா அணியுடன் மோதியது. பால்மாவில் உள்ள மல்லார்கா அணிக்கு சொந்தமான மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் போது, 52- வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி ஜெர்சி அணிந்த ஒருவர் பாதுகாப்பை முறி மைதானத்துக்குள் புகுந்து மெஸ்ஸியை நோக்கி ஓடினார். மைதானத்துக்குள் ஒருவர் ஓடுவதை  கண்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அவரை விரட்டி சென்று பிடித்து, அவரை மைதானத்திலிருந்து வெளியேற்றினர். அந்த ரசிகர் மாஸ்க் கூட அணிந்திருக்கவில்லை. 

இது குறித்து லாலீகா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாதுகாப்பை மீறி அடுத்தவருக்கு நோய் கிருமியை பரப்பும் வகையிலும் நடந்து கொண்ட ரசிகர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் ' என்று கடுமையாக எச்சரித்துள்ளது.

ஆனால், போலீஸார் அந்த ரசிகரை விடுவித்து விட்டனர். ஸ்பெயினின் கேன்டன் கோப் ரேடியோவுக்கு அந்த ரசிகர் அளித்த பேட்டியில், 'மைதானத்தின் உள்ளே சென்றால் என்ன நடக்குமென்று எனக்கு தெரியும். அதேபோலத்தான் நடந்தது. முதலில் ஜோர்டி ஆல்பாவை சந்தித்தேன். அவரிடத்தில் 'மெஸ்ஸியை பார்க்கப் போகிறேன்' என்றேன். இதுவும் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஏனென்றால், மெஸ்ஸி என் கடவுள் ' என்று தெரிவித்துள்ளார்.

மைதானத்தில் பாதுகாப்பு குறைவாக இருந்த தெற்கு பகுதியில் உள்ள கம்பி வேலியை பிரித்து அந்த ரசிகர் உள்ளே நுழைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மைதானத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மல்லார்கா அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. பார்சிலோனா அணி 61 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments