கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னுதாரணமாக திகழும் தாராவி

0 6758

மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது பிறரும் பின்பற்ற வேண்டிய பாடமாக அமைந்துள்ளது.

ஆசியாவிலேயே மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவி ஒரு காலத்தில் கொரோனா அதிகம் பரவும் பகுதியாக விளங்கியது. நூறு சதுர அடி பரப்புள்ள குடிசை வீட்டுக்குள் 7 பேர் கொண்ட குடும்பம் வாழ்வது, என்பது குடும்பங்கள் ஒரு பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துவது என நெருக்கடியான சூழலால் இங்குக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

இத்தகைய சூழலில் மும்பை மாநகராட்சி உதவி ஆணையர் கிரண் திகாவ்கர் தாராவியில் கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளுக்குப் பொறுப்பேற்றார். அதன்பின் ஏப்ரல் மாதத்தில் இருந்து பணியாளர்கள் 47,500 வீடுகளில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேருக்குக் காய்ச்சல், ரத்தத்தில் கலந்துள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைக் கண்டறியும் சோதனை செய்துள்ளனர்.

காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கும் மையங்களை அதிக எண்ணிக்கையில் தொடங்கி, கொரோனா அறிகுறி உள்ளவர்களை உடனடியாகத் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் நாள்தோறும் வரும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மே மாதத் தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது மூன்றில் ஒருபங்காகக் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 51 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர். மும்பையில் குணமடைந்தோர் விகிதமான 41 விழுக்காட்டை விட இது மிக அதிகமாகும். கொரோனாவால் உயிரிழப்போர் விகிதமும் தாராவியில் சரிந்துள்ளது.

இடையறாத முயற்சிகளால் தாராவியில் கொரோனா பாதிப்பைக் குறைத்துள்ளது, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பிற நாடுகள் பின்பற்ற வேண்டிய பாடமாக அமைந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments