சினிமாவில் அவர்கள் ஹீரோ ; நிஜத்தில் இவர்தான் ஹீரோ! - மரணமடைந்த 'பாடிகாட் 'தாஸ் யார்?

0 15333
நடிகர் விஜய் மற்றும் காஜல் அகர்வாலுடன் தாஸ்

மாரநல்லூர் தாஸ்... தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர். மாரநல்லூர் தாஸ் எனும் பெயர் பலருக்குப் பரீட்சயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், 'பாடிகாட் தாஸ்', 'க்ரவுட் தாஸ்' என்றால் உடனே அனைவருக்கும் தாஸ் சேட்டாவின் ஞாபகம் வந்துவிடும். கருப்பு நிற சட்டை, ஆறு இன்ச் மூன்றடி உயரத்துடன் சினிமா படப்பிடிப்புகள், சினிமா நட்சத்திரங்களின் விழாக்களில் இவரைப் பரவலாகப் பார்த்திருக்க முடியும். விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் மம்முட்டி, மோகன்லால், பவன் கல்யாண், ஷாருக்கான் உள்ளிட்ட பலருக்கும் பாடிகார்டாக இருந்து பாதுகாப்பு அளித்த மாரநல்லூர் தாஸ் இயற்கையடைந்த சம்பவம் திரையுலகத்துக்குப் பேரிழப்பாகவே கருதப்படுகிறது.

image

47 வயதே ஆகியிருக்கும் தாஸின் இயற்பெயர் கிறிஸ்து தாஸ்.திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மஞ்சள் காமாலை நோய்க்குச் சிகிச்சை பெற்றுவந்தவர் இறப்பைத் தழுவியிருக்கிறார். கடந்த 25 வருடங்களாக திரையுலக நட்சத்தினர் மத்தியில் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றிருந்த பாடிகார்ட் தாஸின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மலையாள சினிமாவில் 'தனியார் பாதுகாப்பு சேவை' என்ற கருதுகோளை முதன்முதலில் உருவாக்கிச் செயல்படுத்தியவர் தாஸ். தொடக்கத்தில் சினிமா படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் சிறுசிறு வேலைகளைச் செய்து வந்தார். அதன் பிறகு பணி நிமித்தம் காரணமாக வளைகுடா பகுதிக்குச் சென்றார். அங்கு சில வருடங்கள் வேலை செய்தவர் மீண்டும் தாயகம் திரும்பி சினிமா துறையிலேயே தனது பணியைத் தொடங்கினார். அவரது சினிமா பணியானது 'ஷ்ரதா'  படப்பிடிப்பின் போது மோகன்லாலுக்குப்  பாதுகாவலராக இருந்ததிலிருந்து தொடங்கியது. அதன் பிறகு 'பலுங்கு' படப்பிடிப்பின் போதும்  மம்முட்டிக்கு பாதுகாப்பு அளித்தார். அதிலிருந்து கடந்த 25 ஆண்டுகளாக தாஸும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களும் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டம், அவர்களின் அத்துமீறல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

image

டீன் ஏஜ் பருவத்தில் சினிமாவில் தனது பயணத்தைக் தொடங்கிய போது நண்பர்களால் 'கிரவுடு தாசன்' என்றுதான் அழைக்கப்பட்டார். எந்தளவுக்கு ரசிகர் கூட்டம் இருந்தாலும் திறமையாகக் கையாண்டு திரையுலக நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்திக் கொடுத்துவிடுவார் தாஸ். படப்பிடிப்பு தளம், விழாக்கள் உள்ளிட்ட எந்த சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும் தாஸ் தென்பட்டால் போதும் நடிகர்கள் எந்தவித கவலையும் இன்றி தங்கள் வேலையை செய்வார்கள். அந்த அளவுக்கு தாஸ் அனைவர் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்திருந்தார்.

கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்ற செய்தி கேள்விப்பட்டால் போதும், பொதுமக்கள் திரண்டுவிடுவார்கள். அந்தக் கூட்டம் முழுவதையும் ஒற்றை ஆளாய் கட்டுப்படுத்திப் பாதுகாப்பு அளித்துக்கொண்டிருந்தவர் தாஸ். தமிழ்த் திரையுலகில் விஜய், அஜித் ஆகியோருக்கும் தெலுங்கு திரையுலகில் பவன் கல்யாணுக்கும் வேலை செய்திருக்கிறார். பாலிவுட்டில் ப்ரியதர்ஷன் இயக்கிய பில்லு பார்பர், கட்டா மெட்டா  ஆகிய படங்களின் படப்பிடிப்புத் தளங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

">

"கிரீடம் உன்னி சாரின் வீட்டில் அவருக்கு உதவி செய்துகொண்டிருந்த போதே சினிமா எனக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தேன். அதன் பிறகு மஸ்கட்டில் உள்ள சந்தைக்கு வேலைக்குச் சென்றேன். சினிமா தொழில் தான் எனக்கு வேண்டும் என்று மீண்டும் திரும்பி வந்துவிட்டேன். எனக்கு சினிமா தான் வாழ்க்கை. நான் சினிமாவை நேசிக்கிறேன்" என்று ஒருமுறை மாரநல்லூர் தாஸ் கூறியிருக்கிறார்.

மாரநல்லூர் தாஸ் இறப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட திரையுலக நடிகர்கள் பலர் தங்களது இறங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். இவரது மறைவு குறித்து நடிகர் துல்கர் சல்மான், "மாரநல்லூர் தாஸ் ஒரு விழாவிலோ அல்லது படப்பிடிப்புத் தளத்திலோ எங்காவது ஒரு மூலையில் இருப்பதைப் பார்த்தாலே போதும். அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் எனும் நம்பிக்கையில் கவலையின்றி நம் பணிகளைச் செய்யலாம். அவருக்கென்று தனிப்பட்ட அடைமொழி, பட்டங்கள் என்று எதுவும் இல்லை. ஆனால், மலையாள சினிமாவில் 'தாஸ்' என்றால் அவர் ஒருவர் மட்டுமே.." என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்...!

தாஸின் இறப்பு திரையுலகில் ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே கருதப்படுகிறது. இத்தனை வருடங்களாக ஓயாமல் அனைவருக்கும் பாதுகாப்பளித்த தாஸின் மனம் இறைவனின் திருவடியில் அமைதியாக இளைப்பாறட்டும்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments