பைக் திருட்டில்.. பாதிரியார் கைது..! பழுதான பைக்கால் பாவ மன்னிப்பு
மதுரையில் இருசக்கர வாகனங்களை திருடி ஜெபக்கூட்டம் நடத்திவந்த பாதிரியார் ஒருவர் கையும் களவுமாக சிக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். தேவாலயத்தில் பாவமன்னிப்பு வழங்கியவர் திருடரான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
மதுரை தனக்கன்குளம் பர்மாகாலனி பகுதியில் உள்ள கிறிஸ்டியன் பிரதர்ஸ் அசெம்பிளி சர்ச் என்கிற தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் விஜயன் சாமுவேல்.
கடந்த 5 வருடமாக அந்த தேவாலாயத்தில் பாடல் ஆராதனை, பிரார்த்தனை, நல்லொழுக்கம் பற்றி மக்களுக்கு பிரசங்கம் செய்து வந்தார் பாதிரியார் விஜயன் சாமுவேல்.
இந்த நிலையில் சனிக்கிழமை பாதிரியார் விஜயன் சாமுவேல்,இருசக்கர வாகனம் ஒன்றை மதுரை பழங்காநத்தம் அருகே ஓட்டிச்சென்றுள்ளார். அந்த வாகனம் நடுவழியில் பழுதாகி நின்றதால் அருகில் உள்ள இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடைக்கு கொண்டு சென்றுள்ளார்.
வண்டியை பார்த்த உடன் அதிர்ச்சி அடைந்த அங்குள்ள மெக்கானிக் சுரேஷ் என்பவர், வண்டியை சரி செய்ய அரை மணி நேரம் ஆகும் , கடைக்கு செல்ல வேண்டும் என்றால் சென்று வாருங்கள் என கூறி விஜயன் சாமுவேலை அனுப்பி வைத்துள்ளார்.
அங்கிருந்து அவர் சென்றதும் மெக்கானிக் சுரேஷ், வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்து உங்களது இரு சக்கர வாகனம் ஒன்று களவு போனதல்லவா அதே போல ஒரு வாகனம் பழுது நீக்க தனது மெக்கானிக் செட்டுக்கு வந்துள்ளது என கூறி அழைத்துள்ளார். சில நிமிடங்களிலேயே கடைக்கு வந்து பார்த்தவர் அது தனது வண்டி தான் என்பதை உறுதி செய்ததோடு, சுப்பிரமணியபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அங்கு அழைத்து வந்தார்.
வாகனத்தின் உரிமையாளரும், போலீசாரும் பழுது நீக்கும் கடைக்கு அருகில் மறைந்து நின்று கொள்ள,பாதிரியார் சாமுவேல், தனது வண்டி தயாராகி விட்டதா? என கேட்டு அங்கு வந்த போது அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
ஊருக்கே பாவமன்னிப்பு வழங்கிய பாதிரியாரை காவல் நிலையம் அழைத்துச்சென்று சிறப்பாக கவனித்ததால் பாதிரியார் விஜயன் சாமுவேல் ஒரு பலே பைக் திருடன் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. மதுரை நகரில் மட்டும் 12க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடி அந்த பணத்தை வைத்து மக்களை கூட்டி வார இறுதி நாட்களில் ஜெபக்கூட்டம் நடத்தியதும் தெரியவந்தது.
பாதிரியாரிடம் குறைந்த விலைக்கு பைக் வாங்கிய நபர்களிடம் இருந்து அந்த 12 இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருட்டு பாதிரியார் விஜயன்சாமுவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்களுக்கு போதனை செய்யும் பொறுப்பான பாதிரியார் ஒருவர் பைக் திருட்டு வழக்கில் சிக்கி இருப்பது, சக பாதிரியார்களுக்கு சோதனையாக இருந்தாலும் அவரது தேவாலய சபைக்கு வந்தவர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது.
Comments