இயக்குநர் கண்ணாய் இருந்தவர் ... இமை மூடினார்

0 4386

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் பிரபல ஒளிப்பதிவாளரும், "பாரதிராஜாவின் கண்கள்" என வர்ணிக்கப்பட்டவருமான கண்ணன் காலமானார் அவருக்கு வயது 69.

தமிழ் திரையுலகின் பழம்பெரும் இயக்குநரான பீம்சிங்கின் மகனும், புகழ்பெற்ற திரைப்பட தொகுப்பாளர் லெனினின் சகோதரருமான கண்ணன், இயக்குநர் பாரதிராஜாவின் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' திரைப்படம் வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர்.

'அலைகள் ஓய்வதில்லை', 'டிக் டிக் டிக்', 'காதல் ஓவியம்', 'மண் வாசனை', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'வேதம் புதிது', 'கிழக்குச் சீமையிலே' என பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு தன் ஒளிப்பதிவால் மெருகூட்டியவர் கண்ணன்.

"படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன்" என பாரதிராஜா ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். தனது தந்தை பீம்சிங் இயக்கிய 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' என்ற படத்திற்கும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள திரைப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

"அலைகள் ஓய்வதில்லை", "கண்களால் கைது செய்" ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை இருமுறை வென்றுள்ளார். உடல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணன், இன்று காலமானார். ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த கண்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட கண்ணனின் உடலுக்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments