2k கிட்டுக்கு திருமணம் கம்பி எண்ணும் குடும்பத்தார்..! நாடகமாடி சிக்கிய பெண்

0 18407

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விருந்துக்கு அழைத்து சென்று, பத்தாம் வகுப்பு மாணவிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக இரு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்குச் செல்லும் சகோதரியை கணவரின் தம்பிக்கு திருமணம் செய்துவைத்து விட்டு நாடகமாடிய பெண் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவிலூர் தோப்புப் பட்டியைச் சேர்ந்த தம்பதியின் 15 வயது மகள் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவியின் மூத்த சகோதரி நதிவதனா என்பவரை சின்னதாராபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் நதிவதனாவுக்கும் அவரது மாமியார் காளீஸ்வரிக்கும் ஏற்பட்ட தகராறில், நதிவதனாவை தாய்வீட்டுக்கு விரட்டியதாக கூறப்படுகின்றது.

இது குறித்து வடமதுரை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நதிவதனா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, 10 ஆம் வகுப்பு படிக்கும் தனது தங்கையை , விருந்துக்கு அழைத்துச்சென்ற மாமியார் காளீஸ்வரி, கணவர் செல்வம் ஆகியோர் சேர்ந்து தனது தங்கையை, கணவரின் சகோதரர் தமிழரசனுக்கு, கட்டாயத் திருமணம் செய்துவைத்து வீட்டில் அடைத்து வைத்துள்ளதாகவும், ஊரடங்கு காரணமாக புகார் அளிக்கவில்லை என்றும் கூறி இருந்தனர். இதற்கு ஆதாரமாக சிறுமிக்கு தமிழரசன் தாலி கட்டும் வீடியோவையும் கொடுத்திருந்தார்.

மாமியார் காளீஸ்வரி மற்றும் கணவர் செல்வம் உள்ளிட்டோரை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது, நதிவதனாவின் உதவியுடனேயே மாணவிக்கு இந்த கட்டாய திருமணம் நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

நதிவதனாவின் கணவர் செல்வத்தின் சகோதரர் தமிழரசன், 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை விரும்பியுள்ளார். இது தெரிந்த நதிவதனா வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் ஏற்பாட்டின் பேரில் குடும்பத்துடன் கோவிலுக்கு அழைத்து சென்று அந்த சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது கணவர் வீட்டாரிடம் சண்டையிட்டு நதிவதனா பிரிந்து வந்து விட்டதால் கணவர் வீட்டாரை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, தனது தங்கைக்கு மாமியார் வீட்டார் கட்டாயத் திருமணம் செய்ததாக நாடகமாடியது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த இருவரது பெற்றோர், அதற்கு உடந்தையாக இருந்த நதிவதனா அவரது கணவர் செல்வம், சிறுமியுடன் குடித்தனம் நடத்திவந்த தமிழரசன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

தொலைக்காட்சி சீரியல்களை பார்த்து, கணவர் குடும்பத்தை பழிவாங்குவதற்காக, நதிவதனா நடத்திய நாடகத்தில் அவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கைதாகி ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பது தான் உச்சக்கட்ட ட்விஸ்ட்..!

18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொடுப்பதால் பதின் பருவ பெண்கள் மன ரீதியாக மட்டுமல்ல, உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments