பாஜக நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் சர்ச்சை
சென்னையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு முரணாக, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மாநில கட்சியின் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் அவரின் கட்சியினர் 1,000-க்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி, அமைந்தகரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் முருகனிடம், திருமணத்திற்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் கட்சி விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கூட்டுவது சரியா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் நன்றி வணக்கம் என கூறியபடி சென்றுவிட்டார்.
நிகழ்ச்சிக்கு வந்தோரின் வாகனங்கள் சாலையோரத்தில் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் நேரிட்டது. நிகழ்ச்சிக்கு பால்கனகராஜின் கட்சியினர் திடீரென ஏற்பாடு செய்ததாகவும், இத்தனை பேரை அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் இருந்தாலும் அரங்கில் இருந்து பலரை தாங்கள் வெளியேற்றியதாகவும் பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
Comments