காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது...

0 3454

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீரைத் திறந்து வைத்தார். கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் குமாரமங்கலத்தில் புதிய கதவணையும், அணைக்கரையில் புதிய அணையும் கட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மேட்டூர் அணைக்கு வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன், பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். அணையின் வலக்கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை முதலமைச்சர் இயக்கிக் காவிரி டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டார்.

முதற்கட்டமாக நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீரில் மலர்களைத் தூவிக் காவிரி அன்னைக்கு முதலமைச்சர் மரியாதை செய்தார்.

அதன் பின்னர் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன், சரோஜா ஆகியோரும் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரில் மலர்களைத் தூவி மரியாதை செய்தனர்.

2008 ஆண்டுக்குப் பிறகு 12ஆண்டுகள் கழித்து இப்போது தான் உரிய காலத்தில் குறுவை நெல் பயிரிடுவதற்காகத் தண்ணீர் திறக்ககப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசன வசதி பெறும் 12 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அணையில் நீர் திறந்துவைத்த பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குறுவை சாகுபடிக்காக 90 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்றும், இதனால் ஐந்தேகால் லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஜனவரி இறுதிக்குள் முடிவடையும் எனத் தெரிவித்தார். மேட்டூர் அணைப் பூங்காவில் 25 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொங்கு பாலம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments