கொரோனா பாதித்த கொல்கத்தா இளைஞர் மீது போலீஸ் வழக்கு..! நோயை பரப்பியதாக நடவடிக்கை
கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த இளைஞர் தனிமைப்படுத்தி இருக்காமல், நாமக்கல்லில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்றதால், அவர் மீது நோய்த் தொற்று பரப்பும் சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த முகமது மோசிம் என்ற தொழிலாளி அங்கிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்துள்ளார். நாமக்கல் மில்லில் பணிக்கு செல்வதாக கூறியுள்ளார்.
விமான நிலையத்தில் முகமது மோசிமை பரிசோதித்த மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். கையில் அதற்குரிய சீல் குத்தி அனுப்பி வைத்துள்ளனர். அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக எழுதிக் கொடுத்து சென்றுள்ளார்.
ஆனால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதை மறைத்த முகமது மோசிம், நாமக்கல்லில் உள்ள தனியார் மில்லுக்கு பணிக்கு சென்றுள்ளார். அங்குள்ளவர்கள் கேட்ட போது, தனக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததாக ஏமாற்றியுள்ளார்.
வழக்கமாக ஒரு நாள் இடைவெளியில் கொரோனா ரிசல்ட் வந்துவிடும் நிலையில் முகமது மோசிமின் ரிசல்ட் 2 நாட்கள் கழித்து வந்துள்ளது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சொன்ன நாமக்கல் முகவரிக்கு சென்று சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்த போது அவர் தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்று அவரை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
முன்னதாக மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி மில்லுக்கு வேலைக்கு சென்று கொரோனா நோய்த் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதால் முகமது மோசிம் மீது நோய்த் தொற்று பரப்புதல் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முகமது மோசிம் பணிபுரிந்த மில்லின் யூனிட் நிறுத்தப்பட்டதுடன் அவருடன் அறையில் தங்கி இருந்த 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பணிக்கு வருபவர்களை முறையாக பரிசோதனை செய்து அரசு கண்காணிப்பில் தனிப்படுத்த தவறினால் இதுபோன்ற விபரீதங்களை தடுக்க இயலாமல் சென்று விடும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கொரோனா பாதித்த கொல்கத்தா இளைஞர் மீது போலீஸ் வழக்கு..! நோயை பரப்பியதாக நடவடிக்கை | #Kolkata | #COVID19 https://t.co/NKi8TVi16L
— Polimer News (@polimernews) June 12, 2020
Comments