விழுந்து விழுந்து வேலை பார்த்தும் உளுந்துக்கு விலையில்லை..! காப்பீடு விவசாயிகள் வேதனை

0 7483

தூத்துக்குடியில் உளுந்து அறுவடை தொடங்கி உள்ள நிலையில் வியாபாரிகள் தருகின்ற விலை கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அத்திமரப்பட்டி, காலாங்கரை, முத்தையாபுரம் குலையன்கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து பயிரிடப்படுவது வழக்கம். அப்படி பயிரிடப்பட்ட உளுந்து பயிர் நல்ல விளைச்சல் கண்டுள்ளதுடன் அறுவடை பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன .

இந்தநிலையில் கடைகளில் ஒரு கிலோ உளுந்து 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் 100 கிலோ எடையுள்ள உளுந்து மூட்டையை 5500 ரூபாய்க்கு மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்.

வியாபாரிகள் கொடுக்கின்ற விலை தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என்று கூறும் விவசாயிகள் இது விவசாயம் செய்வதற்கும், கூலிக்குமே போதாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதால் நெல் கொள்முதல் செய்வது போல் உளுந்தையும் அரசே குவிண்டாலுக்கு 10 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டரில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என விவசாயிகள் தூத்துக்குடியில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விவசாயிகள் காப்பீடு செய்த வகையில் 2018-19 ஆம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு சுமார் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

ஒருபக்கம் விளைவித்த பொருளுக்கு வியாபாரிகள் உரிய விலை கொடுப்பதில்லை, மறுபக்கம் பல ஆயிரம் கோடி சொத்துக்களை கொண்ட காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்குவதில்லை என்பதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments