12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ள மேட்டூர் அணை

0 6257

காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை காலை மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைக்க இருக்கிறார். 12 வருடத்திற்கு பிறகு ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை, தமிழகத்திலேயே மிகப்பெரிய அணையாகும். இந்த அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் உயரம் 120 அடிகளாகவும், கொள்ளளவு 93.4 டி.எம்.சி.யாகவும் உள்ளது. காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்கு மேட்டூர் அணையையே நம்பி உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதுவரை 15 முறை ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் போதிய நீர் இருந்ததால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த 12 ஆண்டுகளில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

கடந்த 2011 ஆம் ஆண்டு மட்டும் கூடுதல் தண்ணீர் இருந்ததால் ஜூன் 6 ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. மேட்டூர் அணையில் 300 நாட்களுக்கு மேலாக 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது.

காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் 101 அடி தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் உள்ளதால் நாளை மேட்டூர் அணை திறக்கப்பட இருக்கிறது. நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட இருக்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்படுவதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments