முதலிரவில் புதுமணப்பெண் கொலை கணவன் தற்கொலை
திருவள்ளூர் அருகே திருமணம் முடிந்து முதலிரவுக்கு சென்ற புதுப் பெண்ணை, கணவன் கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அடுத்த சோமஞ்சேரி பகுதியை சேர்ந்த நீதிவாசன் என்பவருக்கும், சடையான்குப்பம் பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண்ணான சந்தியாவுக்கும் புதன்கிழமை காலையில் திருமணம் நடைபெற்றது.
அன்று முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மணப்பெண் சந்தியா இரவு 11 மணி அளவில் பயங்கரமாக சத்தமிட்டுள்ளார். வெளியில் படுத்திருந்த பெரியவர்கள் எழுந்து சென்று விசாரித்த போது ஒன்றும் இல்லை என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளான் மணமகன் நீதிவாசன்.
இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் வேட்டி மட்டும் அணிந்திருந்த நீதிவாசன் உரக்க கத்தியவாறே முதலிரவு அறையில் இருந்து தப்பி ஓடியுள்ளான்.
இதனால் பதறியடித்து எழுந்த உறவினர்கள், முதலிரவு அறைக்குள் சென்று பார்த்த போது மணமகள் சந்தியா ஆடைகள் கலைந்த நிலையில் கடப்பாரையால் அடித்தும் , குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். முதலிரவு அறையில் இருந்து தப்பி ஓடிய மணமகன் நீதிவாசனை தேடி வந்த நிலையில் காலை 7 மணியளவில் அருகிலுள்ள வயல்வெளியில் உள்ள வேப்பமரம் ஒன்றில் நீதிவாசன்,ஆடைகள் இல்லாத நிலையில் வேட்டியால் தூக்கிட்டு தொங்கியபடி சடலமாக கிடந்தான்.
இதையடுத்து அவனது சடலத்தை மீட்ட போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்தனர். கடந்த சில ஆண்டுகளாக மணமகன் நீதிவாசன் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளான்.
பெண்களை பார்த்தால் ஆடைகளை களைந்து விட்டு வீதியில் சுற்றும் பழக்கமும் நீதிவாசனுக்கு உள்ளதாக கூறுகிறார்கள். ஒரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என உறவினர்கள் சிலரின் சொல்பேச்சு கேட்டு உறவுக்கார பெண்ணான சந்தியாவை ஒரு வருடத்திற்கு முன்பு பேசி முடித்துள்ளனர், அவனது பெற்றோர்.
இதற்க்கு இடையே மன நிலை கோளாறுக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்து வந்த நீதி வாசன், கொரோனா ஊரடங்கால், கடந்த 3 மாதங்களாக அந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் திருமணத்தன்று முதலிரவு அறையில் வைத்து தனது மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு, நீதிவாசனும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மன நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்பது தவறான கருத்து என்று சுட்டிக்காட்டுகின்றனர் மனோதத்துவ நிபுணர்கள் .
அதே நேரத்தில் மனச்சிதைவு உள்ள நபர்களுக்கு மருத்துவர் மூலம் முழு மன நல பரிசோதனை செய்து, அதில் சம்பந்தப்பட்டவர் முழு உடல் மற்றும் மன நலத்துடன் இருந்தால் மட்டுமே திருமண ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இல்லையேனில் இது போன்ற விபரீத சம்பவங்கள் நிகழ காரணமாகி விடும் என்று எச்சரிக்கின்ரனர் மருத்துவர்கள்.
Comments