ஆம்புலன்ஸில் கணவர் உடல்; முகத்தை பார்க்க 2 நிமிடங்கள்;கதறிய மனைவி! ஒவ்வொரு மக்களையும் துன்புறுத்தும் கொரோனா
கேரள மாநிலம் கோழிக்கோடு பரம்பரா பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் - ஆதிரா தம்பதி . நிதின் இன்ஜீனியர் ஆதிர சாஃப்ட்வேர் இன்ஜினியர் . இருவரும் துபாயில் வசித்தனர். சமீபத்தில்தான் இவர்களுக்கு திருமணமானது. .வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் மகிழ்ச்சியான வாழ்க்கை. இனிமையான இல்லறத்தின் அடையாளமாக ஆதிரா கர்ப்பமடைந்திருந்தார். குழந்தையை எதிர்பார்த்து தம்பதியினர் கனவுடன் இருந்தனர். தம்பதியின் சந்தோஷமான வாழ்க்கையை பார்த்து கொரோனாவுக்கு பொறுக்கவில்லை. இவர்களின் வாழ்க்கையில் விளையாடத் தொடங்கியது.
கொரோனா காரணமாக உலக நாடுகள் லாக்டௌன் செய்யப்பட்டன. அமீரகத்திலும் கொரோனா பரவி வந்ததால் கர்ப்பிணி மனைவியை தாய்நாட்டுக்கு அனுப்ப நிதின் முடிவெடுத்தார். ஆனால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அனுப்ப முடியவில்லை. மனைவியை தாய்நாடு அனுப்ப உச்சநீதிமன்றத்தின் உதவியை கூட நிதின் நாடினார்.கடந்த ஏப்ரல் மாதத்தில் இவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, ஆதிராவுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டு முதல் விமானத்திலேயே தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 'மனைவியை தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்தாகி விட்டது இனி கவலையில்லை' என்று நிதின் மனம் சந்தோஷத்தில் துள்ளியது. ஆனால், விதியோ வேறு ஒன்றை நினைத்தது. ஏற்கெனவே. நிதினுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஹைபர்டென்சனும் இருந்துள்ளது. ஆனால், இதற்கெல்லாம் மருந்துகள் எடுக்காமல் தொடர்ந்து வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்டு துபாயில் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிதின் மாரடைப்பால் உயிரிழந்து போனார். இந்த நேரத்தில் நிதின் மனைவி ஆதிராவுக்கு வயிற்று வலி ஏற்பட அவரும் கோழிக்கோட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆதிராவுக்கு பிரசவ நேரம் என்பதால் கணவர் இறந்த தகவல் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருந்தனர்.
இதற்கிடையே, ஷார்ஜாவில் இருந்து நிதின் உடல் கோழிக்கோடு 10- ந் தேதி கொண்டு வரப்பட்டது. பிறகுதான், மருத்துவமனையில் இருந்த ஆதிராவிடத்தில் கணவர் நிதின் இறந்தது குறித்து தகவலை மருத்துவர்கள் பக்குவமாக தெரிவித்தனர். தகவலை கேட்டதும் மனமுடைந்து போன ஆதிரா கதறி அழுதார்.' என் கணவரின் முகத்தை ஒரு முறையாவது காட்டி விடுங்கள்!' என்று கதறினார். இதையடுத்து, ஆதிரா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நிதின் உடல் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸ் அருகே வீல் சேரில் அழைத்து வரப்பட்ட ஆதிராவுக்கு 2 நிமிடங்கள் மட்டுமே கணவரின் முகம் காட்டப்பட்டது.' உங்க முகத்தை கூட பார்க்க முடியாத பாவியாகிவிட்டேனே' என்று , ஆதிரா கதறி அழுதது சுற்றியிருந்தவர்களின் கண்களில் நீர் கசிய வைத்து.
நிதினுக்கு கொரோனா பாதிப்பில்லை. கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அவர் உயிரிழந்ததாக ,அமீரக அரசு சட்டிஃபிகேட் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக நாட்டில் ஒவ்வொரு மக்களும் ஏதோ ஒரு வகையில் வேதனையை அனுபவிக்கின்றனர்.
Comments