வெடிகுண்டு போண்டா .. தலை சிதறி சிறுவன் பலி..! திகிலில் திருச்சி
திருச்சி அருகே மீன் பிடிக்க பயன்படும் நாட்டு வெடிகுண்டை, போண்டா என்று நினைத்து கடித்த 6 வயது சிறுவன் தலைசிதறி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த அலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன், இவர் பாப்பாபட்டி பகுதியில் உள்ள குவாரியில் செல்வக்குமாரிடம் பாறையை உடைக்க பயன்படுத்தும் 3 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்துள்ளார்.
அந்த நாட்டு வெடிகளை கொண்டு மணமேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கங்காதரன் மீன்பிடித்துள்ளார். தமிழரசன், மோகன்ராஜ் ஆகியோரும் அவருடன் ஆற்றில் வெடிகளை வீசி, அந்த அதிர்வில் செத்து மிதக்கும் மீன்களை சேகரித்துள்ளனர்.
2 வெடி குண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தேவையான மீன்கள் கிடைத்து விட்டதால் அருகில் உள்ள உறவினரான பூபதியின் வீட்டுக்கு மீன்களுடன் வந்துள்ளனர்.
அப்போது பயன்படுத்தாத ஒரு வெடிகுண்டை வீட்டின் கட்டிலில் வைத்து விட்டு மூவரும் மீனை சமைப்பதற்கு, கழுவி சுத்தம் செய்வதற்காக வீட்டின் பின்பக்கத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த பூபதியின் 6 வயது மகன் விஷ்ணு தேவ், கட்டிலில் இருந்த வெடிகுண்டை போண்டா என நினைத்து எடுத்து கடித்துள்ளான். அடுத்த நொடி பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் சிறுவன் விஷ்ணு தேவ் தலை சிதறி பலியாகி உள்ளான்.
சப்தம் கேட்டு வந்த அவர்கள் சிறுவன் விஷ்ணு தேவின் சடலத்தை வெளியாட்களுக்கு தெரியாமல் அருகில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று ரகசியமாக தகனம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து வெடிகுண்டு வாங்கி வந்த கங்காதரன், மோகன்ராஜ், குவாரியில் வெடிகுண்டு விற்ற செல்வகுமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் குவாரிகளை காரணம் காட்டி வெடிகுண்டுகள் சர்வசாதாரணமாக விற்கப்படும் நிலைக்கு காவல்துறையினர் முதலில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
அதே நேரத்தில் வெடிக்கும் பொருட்களை சிறுவர்கள் கையில் படும்படியான இடத்தில் வைத்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாகி இருக்கின்றது இந்த சிறுவனின் மரணம்..!
Comments