இந்தியா கட்டும் முதல் விமானந்தாங்கிக் கப்பலில் ஹார்ட்டிஸ்க்குகள் திருட்டு... வட இந்தியர்கள் கைது!
கொச்சி கடற்படைத் தளத்தில் உள்நாட்டிலேயே முதல் விமானந்தாங்கிக் கப்பலை இந்திய கடற்படை கட்டி வருகிறது. ஐ.என்.எஸ் விக்ராந்த் என்று இந்த கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2019- ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த கப்பலில் இருந்த கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க்குகள் ,ரேம் போன்றவை திருடு போயின. இதனால், கப்பலின் பாதுகாப்பு குறித்து அச்சம் உருவானது. தேசிய பாதுகாப்பு முகமை வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. கேரள மாநில போலீஸார் உதவியுடன் .தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
5,000 பேரின் கைவிரல் ரேகை ஆய்வு செய்யப்பட்டதில், கப்பலில் பெயின்டர்களாக வேலை பார்த்து வந்த இருவர் டிஸ்க்குகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். வேலையிலிருந்து தங்களை நீக்கியதால், காண்டிரக்டரை பழி வாங்கவே டிஸ்க்குகள் உள்ளிட்டவற்றை திருடி சென்றதாக விசாரணையில் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்
கொச்சியிலுள்ள கப்பல் கட்டும்தளம் இந்தியாவிலேயே மிகப் பெரியது. 1999- ம் ஆண்டு ஐ.என்.எஸ். விக்ராந்த் டிஸைன் செய்யப்பட்டது. 2009- ம் ஆண்டு , கப்பல் கட்டுமானப்பணிகள் தொடங்கின. 2021- ம் ஆண்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு, 2023-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இந்த கப்பல் இணைக்கப்படும்.
இந்த கப்பலை கட்ட ரூ. 20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ் விக்ராந்த் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டால், உலகில் விமானந்தாங்கிக் கப்பலை தயாரிக்கும் 6- வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் ஏற்கெனவே விமானந்தாங்கிக் கப்பலை கட்டுகின்றன.
Comments