ஜெ.அன்பழகன் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
உடல்நலக்குறைவால் காலமான திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையில்,அன்பழகனின் மறைவு குறித்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாகவும், அவரது இறப்பு வேதனையை தருவதாகவும் கூறியுள்ளார். ஜெ.அன்பழகன் மறைவால் வாடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், திமுகவினருக்கும், ஜெ.அன்பழகன் குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார். பாமகவின் சமூகநீதி கொள்கைகளை பல நேரங்களில் வியந்து பேசியவர், பாமக நிர்வாகிகளுடன் இணைந்து அரசியல் பணியாற்றியவர், அரசியல் கடந்த நட்பை பராமரித்து வந்தவர் என அன்பழகன் எம்எல்ஏவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், சிறப்பாக மக்கள் பணியாற்றியவர், சிறந்த களப்பணியாளர், அரசியல் கடந்து தம்முடன் தொடர்பில் இருந்தவர், பாமகவின் கொள்கைகள் மீது மதிப்பு கொண்டவர் என கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஒன்றிணைவோம் வா என்று திமுக தலைவர் விடுத்த அழைப்பை ஏற்று, உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதை மறைத்து, கொரோனா நிவாரண பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், மலை குலைந்தாலும் நிலை குலையாத மாவீரன், அடக்குமுறைக்கு அஞ்சாத சூரன், தலைவரின் கட்டளை என்றால்,கணப்பொழுதில் உயிரையும் பணயம் வைக்கும் உத்தம தொண்டன் எனவும் ஜெ.அன்பழகனுக்கு வைகோ புகழ்ந்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில், ஜெ.அன்பழகன் மனதில் பட்டதை எதார்த்தமாகவும், தைரியமாகவும் பேசக்கூடியவர் என்றும், பிறந்த தினத்திலேயே உயிரிழந்திருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத வலியை மனதில் உருவாக்கி இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் திமுகவினருக்கும், ஜெ.அன்பழகன் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அறிக்கையில் ஈ.ஆர்.ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுற்றார் எனும் செய்தியறிந்து மிகவும் துயருற்றதாக தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் தாமும் பங்கெடுப்பதாகவும் அந்த பதிவில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், தி.மு.க. எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் மறைந்தது வேதனையை அதிகமாக்குகிறது என்று தெரிவித்துள்ளார். கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன் என்றும், டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கலில், ஜெ.அன்பழகன்
திமுக, கலைஞர், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தாண்டி வேறெதுவும் சிந்தித்தவரில்லை என்றும், மாநாடு, பொதுக்கூட்டம் என திமுக பணிகளை கச்சிதமாக முடிக்கும் ஆற்றலாளர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அன்பழகன் கொரோனாவுக்கு பலியானார் என்பது மிகுந்த வேதனையை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உணவுப் பொருள்களை வழங்கி வந்த நிலையில் கொரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது என்றும் வீடியோவில் திருமாவளவன் கூறியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திமுக எம்எல்ஏ - ஜெ. அன்பழகன், ஒரு வீர அபிமன்யு என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் புகழாரம் சூட்டி உள்ளார்.
ஜெ. அன்பழகன் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சட்டமன்றத்திலும் சரி - பொது வெளியிலும் சரி, தனது மனதில் பட்டதை தைரியமாக சொல்லக்கூடியவர் என குறிப்பிட்டு உள்ளார்.
திமுக நிர்வாகிகள், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்காமல் கவனமுடன் பணியாற்றுமாறு, துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெ.அன்பழகன் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..! #DMKMLA | #JAnbazhagan https://t.co/ucwttDrhGI
— Polimer News (@polimernews) June 10, 2020
Comments