நிறவெறிக்கு எதிராகத் தொடரும் போராட்டம்.. ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் உடல் அடக்கம்..!

0 1946

அமெரிக்காவில் உயிரிழந்த கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுவடைந்துள்ளன.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பின இளைஞனை போலீஸ்காரர் ஒருவர் தனது முட்டியால் கழுத்தில் அழுத்தி கொன்றார். அவரது கதறல் அடங்கிய வீடியோ வெளியானதும் பல்வேறு நாடுகளில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தையும், வன்முறையையும் தூண்டிவிட்டது. ஃப்ளாயிட்டின் மரணத்திற்கு நீதி கேட்டு நியூயார்க் நகரில் அமைதிப் பேரணி நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பின மற்றும் வெள்ளையினத்தவரும் பங்கேற்றனர்.

மெக்ஸிகோவில் நடந்த போராட்டத்தின் போது, காவலர் மீது நெருப்பு வைக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. குவாடாஜாலா என்ற இடத்தில் கருப்பின கட்டடத் தொழிலாளி ஒருவர் போலீசார் காவலில் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஃப்ளாயிட்டின் மரணத்துடன், கட்டடத் தொழிலாளியின் மரணத்திற்கும் நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் காவலர் ஒருவர் மீது நெருப்பு வைக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த சகபோலீசார் அவரைக் கீழேதள்ளி நெருப்பை அணைத்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலிலும் நிறவெறிக்கு எதிரான பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீனத்தில் உள்ள மேற்குக் கரையில் இனவெறியைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. இருவேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் பாலஸ்தீன மக்களும், இஸ்ரேலியர்களும் பங்கேற்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில் அடிமை வர்த்தகம் நடத்திய அல்லது ஆதரித்தவர்களின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. லண்டனில் எட்வர்ட் கோல்ஸ்டன் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் லூயிஸ்வில் நகரில் கூட்டமைப்பு அதிகாரி ஜான் பி.காஸில்மேனின் சிலை, இனபாகுபாடுக்கு எதிரான போராட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளானது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய காஸில்மேனின் சிலை சுத்தம் செய்யப்பட்டு அவரின் கல்லறைக்கு மாற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் 18ம் நூற்றாண்டில் அடிமை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த செல்வந்தர் ராபர்ட் மில்லிகன் என்பவர் சிலையை அதிகாரிகளே அகற்றினர். இந்தச்சிலையை அகற்றி அருங்காட்சியகத்தில் வைக்கும்படி லண்டன் நகர மேயர் சாதிக் கான் உத்தரவிட்டார். 

பெல்ஜியத்தில் அடிமை வர்த்தகத்தை ஆதரித்த அரசர் இரண்டாம் லியோபால்ட் சிலை அவமதிக்கப்பட்டது. இதையடுத்து பெயர்த்தெடுக்கப்பட்ட அவர் சிலை அருங்காட்சியகத்திற்குச் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் நிறவெறிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களைப் பார்த்து, இனவெறியைத் தூண்டும் வகையில் சிலர் கோஷமிட்டனர். கருப்பின மக்களை மீண்டும் ஆப்பிரிக்காவுக்குச் செல்லுங்கள் என அவர்கள் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதனிடையே, ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் உடல் அவரது சொந்த ஊரான அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் மக்கள் புடைசூழ குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. அவரது தாயின் கல்லறை அருகே ஃப்ளாயிட்டின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments