கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்

0 19648

கொரோனா பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். தனது 62ஆவது பிறந்த நாளில் காலமான ஜெ.அன்பழகன் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், உடல்நலக்குறைவால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மூச்சுத் திணறல், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 சதவீத ஆக்சிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் வழங்கப்படுவதாகவும், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் முதலில் தெரிவித்திருந்தது.

பின்னர் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவர் உடல் நிலை மீண்டும் மோசம் அடைந்தது- இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காலை 8.05 மணிக்கு, ஜெ.அன்பழகன் காலமானார். மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 62. தனது பிறந்த நாளிலேயே ஜெ.அன்பழகன் மறைந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள வெங்கமூர் கிராமம் தான் ஜெ.அன்பழகனின் சொந்த ஊர். இவரது தந்தை ஜெயராமன் இளம் வயதிலேயே சென்னைக்கு குடிபெயர்ந்து தியாகராயர் நகரில் பழக்கடை தொடங்கினார்.

தனது தந்தை பழக்கடை ஜெயராமனை அடியொற்றி ஜெ.அன்பழகனும் திமுகவில் இணைந்து, கலைஞருக்கு நெருக்கமானவர் என பெயரெடுத்தவர். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். 2001ஆம் ஆண்டில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.

2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்தவர். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

தனது பிறந்த நாளிலேயே மறைந்துள்ள ஜெ.அன்பழகன் உடல், தியாகராய நகர் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், ஜெ.அன்பழகன் உயிரிழந்துள்ளதால், வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சுகாதாரத்துறையும் சென்னை மாநகராட்சியும் இணைந்து இறுதிச்சடங்குகளை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments