முகநூல் காதலில் விழுந்த மனைவிக்கு.. கட்டாய மொட்டை..! அதிரடி கணவர் மீது புகார்
திருமணமாகி பெண் குழந்தை இருக்கும் நிலையில் முகநூலில் காதலில் விழுந்து காதலனுடன் விடிய விடிய சாட்டிங் செய்த மனைவிக்கு மொட்டை அடித்த கணவர் வீட்டுக்குள் பூட்டி வைத்த சம்பவம் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது. மனைவியை மீட்ட அதிகாரிகள் நடு சாலையில் மறிக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை ஆலாங்காட்டு தோட்டம் வாவிகடை பகுதியை சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி லோகநாயகி திருமணமாகி 17- ஆண்டுகள் கடந்த நிலையில் இவர்களுக்கு 16-வயதில் ஒரு மகனும் 15-வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக செல்போனும் கையுமாக சுற்றிய லோகநாயகி, முகநூல் மூலமாக அறிமுகமான ஈரோட்டை சேர்ந்த சண்முகையா என்பவருடன் பழகி வந்துள்ளார். விடிய விடிய சாட்டிங் செய்து வந்த இந்த பழக்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து ஆலோசிக்கும் அளவுக்கு நீண்டுள்ளது.
லோக நாயகியின் முகநூல் தொடர்பு கணவர் தட்சிணா மூர்த்திக்கும் , சகோதரர் தமிழ்வாணனுக்கும் தெரிய வந்ததை தொடர்ந்து லோகநாயகியை கண்டித்துள்ளனர். அவரோ, தான் அழகாக இருப்பதால் முகநூலில் நாலுபேர் தன்னிடம் பேசத்தான் செய்வார்கள் என்பது போல வீட்டில் உரிமைக்குரல் எழுப்பியுள்ளார்.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த கணவர் தட்சிணாமூர்த்தி அவர்களது தோட்டத்தில் மனைவியை கட்டிவைத்து, நாவிதரை அழைத்து மனைவி லோக நாயகிக்கு மொட்டை போட்டுள்ளார். பின்னர் வீட்டுக்குள் தனியறையில் போட்டு பூட்டி சிறைவைத்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து, சில தினங்களாக வீட்டுக்குள் அடங்கி இருந்த லோகநாயகி, மீண்டும் தனது முகநூல் நண்பர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டதாக கூறப்படுகின்றது. அவர்கள் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறைக்கு பெண்ணை அடைத்து வைத்திருப்பதாக தகவல் சென்றுள்ளது.
தட்சினாமூர்த்தி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சென்ற பெண் அதிகாரிகள், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த லோகநாயகியை மீட்டு ஆம்னி வேனில் அழைத்து சென்றனர். இதையறிந்து இரு சக்கரவாகனத்தில் தனது மகளுடன் விரட்டிச்சென்ற தட்சிணாமூர்த்தி நடு ரோட்டில் குறுக்கே வந்து மறித்தார்
தனது மனைவியை தனது அனுமதியின்றி அழைத்து செல்லகூடாது என்று அவரை பிடித்து இழுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..
லோக நாயகி கணவருடன் செல்ல மறுத்து கூச்சலிட்டதால் அடையாள அட்டையை காண்பித்து பெண் அதிகாரிகள் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பத்திரமாக அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து கணவர் மற்றும் சகோதரர் தமிழ்வாணன் மீது லோக நாயகி புகார் அளித்தார். அதே நேரத்தில்,அதிக நேரம் முகநூலுக்கு அடிமையானதால் தனது மனைவிக்கு மனநிலைபாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக தலையை மொட்டை அடித்ததாக கணவர் தட்சிணாமூர்த்தி விளக்கம் அளித்தார்.
லோகநாயகியோ தனது கணவருக்கும், தனக்கும் கருத்துவேறுபாடு உள்ளதாகவும் ,அவர் தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும் தனக்கு மனநிலை பாதிக்கப்படவில்லை என்றும் லோகநாயகி விளக்கம் அளித்தார்..
உணவுக்கும், உடைக்கும் உல்லாச செலவுகளுக்கும் கணவர் வருமானம் வேண்டும், ஆனால் ஆசைதீர பேச இணையத்தில் சில ஆண் நண்பர்கள் வேண்டும் என்ற சிந்தனை கொண்ட பெண்களுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கைப் பாடம் என்று தட்சிணாமூர்த்தி தனது செயலால் அதிரடி காட்டினாலும், மனைவியுடன் தீர்க்க இயலாத அளவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் முறையாக நீதிமன்றத்தை அணுகி பிரிந்து செல்வதை விட்டு, மொட்டை அடித்து வீட்டுக்குள் அடைத்து வைத்து குடும்பம் நடத்துவது ஏற்புடையதல்ல என்கின்றனர் காவல்துறையினர்.
அதே நேரத்தில் முகநூல் காதல் முச்சந்தியில் நிறுத்தும் என்பதற்கு மற்றும் ஒரு சான்றாக மாறி இருக்கின்றது இந்த காதல் மொட்டை விவகாரம்..!
Comments