நொறுக்குத்தீனியை அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்குத் தடை

0 15524

கடைகளில் நொறுக்குத்தீனி அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

பதினான்கு வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018ம் ஆண்டில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவு கடந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழகத்தில் பிளாஸ்டிக் தட்டுகள், டீ கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், கைப்பைகள், கொடிகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணை செல்லும் எனவும், விலக்களிக்கப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டையும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

உணவு பண்டங்கள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை முழுமையாக எட்ட முடியவில்லை என்றும், அவற்றுக்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் வாரியத் தலைவர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் தடை குறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக நொறுக்குத்தீனி அடைத்து விற்பனை செய்யப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments