கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டண புகார்: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

0 1577

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்பது குறித்தும், அதிக கட்டண வசூல் புகார் மீதான நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது- இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பேரிடர் மேலாண்மை சட்டப்படி, பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை செலவை சம்பந்தப்பட்ட மாநில அரசே ஏற்க வேண்டும் என மனுதாரர் வாதிட்டார். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்பது குறித்தும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளனவா? அதிக கட்டண வசூல் குறித்த புகார்கள் மீது இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிவிக்கவும் தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், கொரோனா தொற்று சிகிச்சைக்கு மாநிலங்களுக்கு என்னென்ன அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments