இட்லி வியாபாரிகள் 200 பேரை தமிழகம் அனுப்பிய சோனு சூட்.... தாராவியில் ஆரத்தி எடுத்து வரவேற்ற தமிழ் பெண்கள்!

0 13210
சோனு சூ,ட்டுக்கு ஆரத்தி வரவேற்பு

பொதுவாக நடிகர்களில் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் களம் இறங்கி வேலை பார்ப்பவர்களை காண்பது அரிது. சுனாமி காலத்தில் ஹிந்தி நடிகர் விவேக் ஒபராய் தமிழகத்தில் களம் இறங்கி சேவை புரிந்தார். பெரும்பாலும் நடிகர்கள்  இது போன்ற காலத்தில் அரசுக்கு நன்கொடை கொடுப்பதோடு, தங்கள் கடைமையை முடித்துக் கொள்வார்கள்.

சற்று வித்தியாசமாக விவேக் ஒபராய் போலலே இந்தியாவில் ஒரு நடிகர் மட்டும் கொரோனா காலத்தில்  களம் இறங்கி தீவிரமாக பணி புரிந்து வருகிறார். பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்.தான் அவர். கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் பாதித்த நகரம் மும்பை. அதனால், மும்பையில் கொரோனா பாதித்த மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.

மும்பையில் உள்ள தனக்கு சொந்தமான 6 மாடி ஹோட்டலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், செவிலியர்களை தங்க வைத்து பராமரிக்கிறார் சோனு சூட். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டிருந்த பகுதியில் தினமும் 45,000 மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். புலம் பெயர் தொழிவாளர்களுக்கும் உதவுகிறார்.

மும்பை தராராவி பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான இட்லி வியாபாரிகள் தெருவோர கடை வைத்துள்ளனர். இவர்கள், தாராவி மட்டுமல்லாமல் மட்டுங்கா, சயான், அண்டாப் ஹில் , கோலிவாடா பகுதிகளில் இட்லி வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். கொரோனா லாக்டௌன் காரணமாக இவர்களால் கடை திறக்க முடியவில்லை.

இந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கையில் பணம் இல்லாமல் தவித்தனர். இவர்கள், தங்களை தமிழகத்துக்கு அனுப்பி வைக்குமாறு சோனு சூட்டிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து, தனி பேருந்துகளில் 200 இட்லி வியாபாரிகளை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க சோனு சூட் நடவடிக்கை எடுத்தார். உணவு உள்ளிட்ட பொருள்களையும் அவர் ஏற்பாடு செய்தார்.

பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்ததோடு, தன்னுடையே வேலை முடிந்துவிட்டது என்று சோனு சூட் இருந்துவிடவில்லை.. இட்லி வியாபரிகளின் பயணத்தையும் தொடங்கி வைக்க தாராவிக்கு வருகை தந்தார். அப்போது, தமிழ் பாரம்பரியப்படி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். 

பிறகு, பேருந்தின் முன்பு தேங்காய் உடைத்து இட்லி வியாபாரிகளின் தமிழகப் பயணத்தை சோனு சூட் தொடங்கி வைத்தார். சோனு சூட்டிடத்தில் இட்லி வியாபாரிகள் தமிழில் பேசியபோது, 'எனக்கும் தமிழ் நல்லா தெரியும்' என்றும் அவர் சொன்னார்.

\இந்த வீடியோவை போட்டோகிராபர் வைரல் பயானி என்பவர் இன்ஸ்டராகிராமில் வெளியிட, அது செம வைரலானது. லட்சக்கணக்கானோர்  சோனு சூட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். சோனு சூட்டூவிடத்தில்  உதவி கேட்க 18001213711 என்ற டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments