வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
ஈரோடு அருகே பாதாளச்சாக்கடைக்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியதால் வலு இழந்த வீட்டின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே கிருஷ்ணம்பாளையம் பகுதியில் பாதாளச் சாக்டைக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் வீட்டின் முன்பும் பொக்லைன் எந்திரம் மூலம் சுற்றுச் சுவரை ஒட்டி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அந்த சுற்றுச் சுவர் வலு இழந்து ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. இதனை கவனிக்காமல் பணியை முடித்துவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரேம்குமாரின் மகன் ஜீவன்குமார், மகள் ருத்திரப்பிரியா நிகழப்போகும் விபரீதம் அறியாமல் சுற்றுச்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்கனவே வலு இழந்த நிலையில் இருந்த சுற்றுச்சுவர் அப்படியே உட்புறமாக சரிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி, குழந்தைகள் ருத்திரபிரியா, ஜீவன்குமார் காயம் அடைந்தனர்.
இதனை பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்த உறவினர்கள் இரண்டு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடியுள்ளனர். ஆனால் படுகாயம் அடைந்த குழந்தை ருத்திரபிரியா பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சிறுவன் ஜீவன் குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை அறிந்து ஈரோடு மருத்துவமனைக்கு வந்த குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டி கதறி அழுதது காண்போரை கலங்க வைப்பதாக இருந்தது.
பள்ளம் தோண்டிய பின், வலுவிழந்த நிலையில் இருந்த சுற்றுச்சுவரை மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து தகுந்த முன்னெச்சரிக்கை செய்திருந்தால் இந்த கோர விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதனிடையே குழந்தை ருத்திரபிரியா மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments