அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்.. கறுப்பின இளைஞருக்கு இறுதிச்சடங்கு..!
அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் உடலுக்கு இறுதிச் சடங்கு இன்று நடக்க உள்ளது. இந்த நிலையில் அவரின் மரணத்திற்கு நீதிகேட்டு நடக்கும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னபொலிஸ் என்ற இடத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற இளைஞரை போலீசார் கழுத்தில் மிதித்துக் கொன்றனர். இதையடுத்து ஜார்ஜ் மரணத்திற்கு நீதி கேட்டும், இனவெறி மற்றும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்கா மட்டுமின்றி உலகில் பல நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாயிட் உள்ளிட்ட 4 பேரை நினைவுகூரும் வகையில் 4 சவப்பெட்டிகளுடன் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
இதுஒருபுறம் நடக்க அதே நகரின் மறுபுறத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. இதன் காரணமாக கடைகளுக்கு தீ வைப்பு நிகழ்வுகள் அரங்கேறின. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இனவெறிக்கு எதிராக நடந்த போராட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்றதுடன் தடுக்க முயன்ற இளைஞனை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிலடெல்பியா (Philadelphia) நகரில் திருமணம் நடந்து முடிந்த சில நிமிடங்களே ஆன புதுமணத் தம்பதியினர், பிளாக் லைவ்ஸ் மேட்டர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மருத்துவரான கெர்ரி அன்னே, மைக்கேல் கார்டன் புதுமண தம்பதி, கைகளை உயர்த்தி பிடித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
தொடர் போராட்டங்கள் காரணமாக வாஷிங்டன், ராலிக், வடக்குக் கரோலினா, ஆக்லாந்து, கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும் சாலைகளில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் என பிரமாண்டமாக எழுதி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவைத் தொடர்ந்து அண்டை நாடான மெக்ஸிகோவிலும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் போலீசார் மீது கற்கள் வீசியவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் இன்று நடக்க உள்ளன. இதையடுத்து அவரது சொந்த ஊரான ஹூஸ்டன் நகருக்கு அவரது உடல் கடந்த 6ம் தேதி கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு காரணமாக கூறப்படுகிற மின்னபொலிஸ் நகர போலீஸ் துறையை கலைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள நகர கவுன்சிலில் மொத்தம் உள்ள 13 கவுன்சிலர்களில் 9 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Comments