வாழ்வாதாரம் இழந்த.. மெல்லிசைக் கலைஞர்கள்..!

0 4120

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பல தொழில்கள் செயல்பட தொடங்கிவிட்டன. ஆனால், திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் தங்களது வருமானத்திற்கு வழி தேடிக் கொள்ளும் மேடை மெல்லிசை கலைஞர்கள், எதிர்வரும் பல மாதங்களுக்கு வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

1980-களில் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன் மேடை கச்சேரி பாடகராக தான் இருப்பார்.

அந்த அளவிற்கு தமிழ் திரையுலகில் மேடை கச்சேரிக்கும், மெல்லிசை கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் இருந்தது. 

தமிழ் திரையிசை பாடல்களை பிரதியெடுத்து நகலிசை விருந்து படைக்கும் மேடை மெல்லிசை கலைஞர்கள், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கால் எந்த வருமானமும் இன்றி தவிப்பதாக கூறுகின்றனர்

திருமணம், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளை நம்பி தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் மெல்லிசை கலைஞர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு சீசன் மாதங்களில் கிடைக்கும் வருமானமே ஆண்டு முழுவதற்குமான வாழ்வாதாரம் என்ற நிலையில், ஊரடங்கால் தற்போது வீட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் இசை கருவிகளை போல மவுனமாக இருப்பதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர்.

பொருளாதார ரீதியாக பாதிப்படைந்த பல்வேறு தொழில் சார்ந்தோருக்கு அரசு நிவாரணம் வழங்கிய நிலையில், மெல்லிசை கலைஞர்களுக்கும் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்கிறார் மேடை மெல்லிசை கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், லஷ்மன் ஸ்ருதி மெல்லிசை குழுவின் நிறுவனருமான லஷ்மணன். 

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கோயில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. வரும் நாட்களில் திறக்கப்பட்டாலும் திருவிழா, கச்சேரி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடுத்த சில மாதங்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பில்லை. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் வீட்டிலேயே அதிகபட்சம் 50 பேரோடு நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் இசை நிகழ்ச்சிகளை நம்பி தங்களது வாழ்வாதாரத்தை அமைத்து கொண்ட மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு அரசு தற்காலிக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments