ஓட்டல்களில் அமர்ந்து உணவருந்த இன்று முதல் அனுமதி
தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியைப் பின்பற்றவும், சுகாதாரத்தை கடைபிடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இரண்டரை மாதங்களுக்குப் பின் இன்று முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. ஆயினும், வாடிக்கையாளர்களுக்கும், ஓட்டல் உரிமையாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகின்றனர். உணவகங்களில் ஏ.சி.க்களை இயக்கக் கூடாது, தனிநபர் இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்பன உள்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உணவகங்களில் நான்கு பேர் அமரும் இருக்கையில் எதிர் எதிரே ஒருவரும் இரு நபர் இருக்கையில் ஒருவரும் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உணவருந்திய மேசைகளை சானிடைசரால் சுத்தம் செய்யவும், சானிடைசர் கொடுத்து, உடல் வெப்பம் அறியும் கருவியால் சோதனைக்குப் பின்னரே வாடிக்கையாளரை அனுமதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளி மாநில, மாவட்டத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் சென்னையில் 20 சதவீத உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட உள்ளதாக சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.
டீக் கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டரை மாதங்களுக்குப் பின் பலரும் டீக்கடைகளில் நின்று தேநீர் அருந்தினர். கண்ணாடி டம்ளர்களுக்கு பதிலாக பேப்பர் கப்களிலேயே தேநீர் வழங்கப்பட்டது.
Comments