வீரியம் குறையாத போராட்டங்கள் வீதிகளில் திரண்ட அமெரிக்கர்கள்
கருப்பின நபர் ஜார்ஜ் பிளாய்ட்டின் கொலைக்கு நீதிக் கேட்டும் நிற மற்றும் இனவெறிக்கு எதிராகவும் அமெரிக்கா முழுவதும் 12வது நாளாக வீரியம் குறையாமல் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அமெரிக்காவின் மின்னியாபொலீஸ் நகரில் போலீஸ் அதிகாரி ஒருவர் கழுத்தை முட்டில் மிதிக்க ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட்டு மூச்சுவிடமுடியவில்லை என்று கெஞ்சிய வீடியோவும் அவரது மரணமும், உலக மக்களை இனவெறிக்கு எதிராக 12வது நாளாக தொடர்ந்து போராட வைத்துள்ளது.
வாஷிங்டன், நியூயார்க், அட்லாண்டா, பிலடெல்பியா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன், மியாமி உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகள், மிளகு தூள்களை வீசி எறிந்தனர்.
வாஷிங்டனில் கருவூலத்துறை அலுவலகத்துக்கு முன்பு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களின் வலியுறுத்தலையடுத்து, காவல்துறை அதிகாரிகள் மண்டியிட்டு பிளாக் லைவ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவளித்தனர். கைகளை தட்டி ஆரவாரம் செய்து போராட்டக்காரர்கள் அதற்கு நன்றி தெரிவித்தனர்.
போலீஸ் தாக்குதலில் கருப்பின நபர் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்ததைக் கண்டித்து ஹாங்காங்கில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஏராளமானோர் கொட்டும் மழைக்கு இடையே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கொரியா தலைநகர் சியோலில் இனவெறி மற்றும் போலீசின் கண்மூடித்தனமாக தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து பேரணி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கலவரம் மூண்டது.
Comments