தலைகால் புரியாமல் தப்பியோடி கை, கால்களை முறித்துகொண்ட சோகம் !
பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இருவர் சேலம் போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோடியபோது பாலத்தில் இருந்து விழுந்து கை, கால்களை முறித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் பள்ளப்பட்டி, சூரமங்கலம் பகுதிகளில் நகைப் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பான புகார்களை அடுத்து மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சனிக்கிழமை இரவு போலீசார் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்த பாலாஜி, கார்த்திகேயன் ஆகியோரை அழைத்து வந்து விசாரிக்கையில், பெரம்பலூரை சேர்ந்த விமல்ராஜ் மற்றும் மதுக்கரையைச் சேர்ந்த குமார் என்பவர்களோடு சேர்ந்து நகைப் பறிப்பில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்ததது.
இதனை அடுத்து, பள்ளப்பட்டியில் பதுங்கியிருந்த அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் விசாரணை முடிந்து திரும்புகையில், விமல்ராஜுவும் குமாரும் போலீசாரின் பிடியிலிருந்து தப்பி பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் மீது ஏறி ஓட முயன்றுள்ளனர். அப்போது பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் விமல்ராஜுவுக்கு கைமுறிவும் குமாருக்கு கால் முறிவும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போலீசார், விமல்ராஜுவும் குமாரும் கார்களைக் கடத்தி ஓட்டுநர்களைக் கொன்றுவிட்டு பிறகு அந்தக் கார்களை விற்பனை செய்வது வழக்கம் என்று கூறினர்.
இவர்கள் 6 மாதங்களுக்கு முன் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற கார் ஓட்டுனரை அழைத்து வந்து சங்ககிரி பகுதியில் வைத்து கொன்று உடலை எரித்துவிட்டு, காரை சித்தூரில் விற்றுள்ளளது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் கூறினர். இதில் விமல்ராஜ் மீது 8 கொலை வழக்குகளும் குமார் மீது ஒரு கொலை வழக்கும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தவிர இருவரும் ஹவாலா கும்பலோடு சேர்ந்து மோசடி செய்தது, பன்ருட்டியில் நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து வந்தபிறகான விசாரணையில் மேலும் பல விஷயங்கள் தெரியவரக்கூடும் என்றும் போலீசார் கூறினர்.
Comments