எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் பேச்சு
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இமயமலையில் உள்ள எல்லைப் பகுதிகளில், இந்தியப் பகுதிகள் பலவற்றைச் சீனாவும் உரிமை கொண்டாடி வருகிறது.
இது தொடர்பாக 2017ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தின் டோக்லாமில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே பல முறை மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் ராணுவ அதிகாரிகளிடையேயும், வெளியுறவு அதிகாரிகள் இடையேயும் பேச்சு நடைபெற்றதால் பதற்றம் முடிவுக்கு வந்தது.
கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் கிழக்கு லடாக்கில் கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் ராணுவத்தினரும் படையினரையும் போர்த்தளவாடங்களையும் குவித்து வந்தனர்.
இதேபோல் சிக்கிமிலும் இந்திய - சீன ராணுவத்தினரிடையே கைகலப்பு ஏற்பட்டதால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் இரு நாடுகளிடையே உள்ள தகராறுகளை அமைதிப் பேச்சுகளின் மூலம் தீர்த்துக்கொள்வது என வெள்ளியன்று இருநாட்டு வெளியுறவு அதிகாரிகள் அறிவித்தனர்.
இதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சீனப் பகுதியான மால்டோவில் சனியன்று, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சு நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.
சீனா சார்பில் மேஜர் ஜெனரல் லையு லின் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர். கிழக்கு லடாக்கில் முன்பிருந்த நிலையைப் பராமரிக்க வேண்டும் என இந்தியக் குழுவினர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பேச்சு நிறைவடைந்ததை அடுது லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் தலைமையிலான குழுவினர் லேக்குத் திரும்பியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
Comments