புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தனி விமானம்! உயர்ந்து நிற்கும் 'ஒஸ்தி ' பட வில்லன்
நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான் இப்போது பெரும் பிரச்னையாக உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட 90 சதவிகித புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர். பிரபல வில்லன் நடிகர் சோனு சூட், புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப இலவச விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார். கடந்த வாரம் கேரளாவில் தவித்த ஒடிசாவை சேர்ந்த 167 தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலத்துககு விமானத்தில் அனுப்பி வைத்தார் சோனு சூட். தற்போது, மும்பையிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு 173 தொழிலாளர்களை அனுப்பி வைக்க ஏர்ஏசியாவின் சார்ட்டர்ட் விமானத்தை அவர் புக் செய்துள்ளார்.
மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.57 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 4.41 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் டேராடூனை சென்றடைகிறது. இது குறித்து சோனு சூட் கூறுகையில், '' இந்த தொழிலாளர்கள் அனைவரும் இதற்கு முன் விமானத்தில் பயணித்த அனுபவம் இல்லாதவர்கள். முதல் விமானப்பயணம் என்பதால் அவர்களின் முகத்தில் வித்தியாசமான சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. ஆங்காங்கே, தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு முடிந்தளவு உதவ முடிவு செய்துள்ளேன். அடுத்த, சில நாள்களிலும் சார்ட்டர்ட் விமானம் ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்'' என்றார்.
கள்ளழகர் படத்தில் அறிமுகமாக சோனு சூட் , சந்திரமுகி . ஒஸ்தி உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமானாலும் ஏராளமான இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். படங்களில் வில்லனாக நடிக்கும் சோனு சூட், நிஜத்தில் ஹீரோவாக மாறியுள்ளார்.
Comments